2024-ம் ஆண்டு ஒரே தேர்தலா? மிசாவையே பார்த்த மு.க.ஸ்டாலினை மிரட்ட முடியாது.!!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் போட்டியிடும் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைசர் மு.க.ஸ்டாலின் கே.புதூர், மூன்று மாவடி, ஆரப்பாளையம், உசிலம்பட்டி ஆகிய இடங்களில் காணொளி காட்சி வாயிலாக தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். இதில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். காணொலியில் பேசிய மு.க.ஸ்டாலின், ‘சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மண், கண்ணகி நீதி கேட்டு முழங்கிய மண், கருணாநிதி நீதி கேட்ட மண், தி.மு.க இளைஞர் அணிக்கு அடிக்கல் நாட்டிய மண் மதுரை. தி.மு.க வரலாற்றில் மதுரையும், மதுரை வரலாற்றில் தி.மு.கவும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பினைந்தவை.

தென் தமிழகத்திற்கு தலைநகரம் போல இருக்கிறது மதுரை. மதுரையின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. மதுரையில் பல்வேறு மேம்பாலங்கள், கல்லூரிகள், குடிநீர் திட்டம், வாடிப்பட்டி ஜவுளி பூங்கா, சர்வதேச விமான நிலையம், அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தி.மு.க ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு உள்ளன. மதுரை மேலூரில் புதிய சிப்காட் அமைக்கப்படும்.

அ.தி.மு.க ஆட்சியில் மதுரையை லண்டன், சிங்கப்பூர் ஆக்க போவதாக முன்னாள் அமைச்சர்கள் பேட்டி கொடுத்தார்கள். ஆனால், ஏற்கனவே இருந்த நிலை மேலும் மோசமாக உள்ளது. மதுரை ஸ்மார்ட் சிட்டி, மீனாட்சி கோவில் பகுதி நடைபகுதி அமைப்பதில் ஊழல் நடைபெற்று உள்ளது. ஸ்மார்ட் சிட்டிக்கு உரிய சிறப்பு அதிகாரியை கடைசி வரை நியமிக்காமல் இருந்தனர். சென்னை ஸ்மார்ட் சிட்டி விசாரணை ஆணையம், மதுரை ஸ்மார்ட் சிட்டி ஊழலையும் விசாரிக்கும். விரைவில் இது நடக்கும்.

பரமக்குடி துப்பாக்கி சூடு, தூத்துக்குடி துப்பாக்கி சூடு, ஸ்வாதி – ராம்குமார் கொலை, கொட நாடு இப்படி பல்வேறு சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்றன. பா.ஜ.க அரசுக்கு அடிமை சேவகம் செய்த ஆட்சி தான் பழனிச்சாமி – பன்னீர்செல்வம் நாடக கம்பெனி.. அ.தி.மு.க அமைச்சர்கள் ஒவ்வொருவரும் வித விதமாக காமெடிகள் செய்தவர்கள்.

ஓ.பன்னீர்செல்வம் செய்த தர்ம யுத்தம் தான் மிக பெரிய காமெடி. பரமார்த்த குருவும் அவர்களின் சீடர்களும் போல் தான் அ.தி.மு.க ஆட்சி நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற போது முதலில் களத்திற்கு வந்தவன் நான் தான். அலங்காநல்லூர் பகுதிக்கு நேரில் வந்து ஆதரவு அளித்தது நான் தான்.

ஆனால், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் வன்முறை களமாக மாற்றியது ஓ பன்னீர்செல்வம். பல்லக்கு தூக்கி பழனிசாமி ஆட்சி தான் தமிழக வரலாற்றில் இருண்ட காலம். தமிழர்களின் கீழடி வரலாற்றை வெளி கொண்டு வந்த அமர்நாத் ராமகிருஷ்ணன் அ.தி.மு.க ஆட்சியில் தூக்கி எரியப்பட்டார். திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் மீண்டும் அவர் தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்டார். விரைவில் குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் வழங்கும் திட்டம் நிறைவேற்றப்படும். ஸ்டாலின் ஒன்றை சொன்னால், அதை நான் நிறைவேற்றியே தீருவேன்.

தி.மு.க ஆட்சி உதய சூரியன் ஆட்சி. அதன் வெளிச்சம் பழனிசாமி கண்களை கூசுகிறது. 2024 ஆம் ஆண்டு ஒரே நாடு, ஒரே தேர்தல் வரும் என பழனிசாமி சொல்கிறார். பா.ஜ.கவிற்கு டப்பிங் பேசி கொண்டு இருக்கிறார். மிசாவையே பார்த்த மு.க.ஸ்டாலினை உங்களால் மிரட்ட முடியாது’ என்று தெரிவித்தார்.