சூலூர் காவல் நிலையத்தில் கணவனை தாக்கிய மனைவி குடும்பத்தினர்

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராம்பிரசாத் (29). இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.இவருக்கும், செலக்கரிச்சல் பகுதியைச் சேர்ந்த சண்முகப்பிரியா (25) என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக காதல் திருமணம் நடந்தது. கருத்து வேறுபாடு காரணமாக கணவன், மனைவி இருவரும் கடந்த ஒரு வாரமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

ராம்பிரசாத் தனது அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததாக கூறி சண்முகப்பிரியா சூலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக சண்முகப்பிரியா மற்றும் அவரது குடும்பத்தினர் நேற்று மாலை காவல் நிலையம் வந்து விசாரணைக்காக காத்திருந்தனர். அப்போது செலக்கரிச்சல் பகுதியில் இருந்து காரில் வந்து இறங்கிய சண்முகப்பிரியா குடும்பத்தினர் நேராக ராம் பிரசாத் இருந்த இடத்திற்கு சென்று அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.

இதில் அடி தாங்க முடியாமல் ராம் பிரசாத் கதறினார். சத்தம் கேட்டு காவல் நிலையத்தில் இருந்த தலைமை காவலர் பாலமுருகன் மற்றும் பெண் காவலர் பிரியா மற்றும் காவலர்கள் உடனடியாக அங்கு வந்தனர். ராம் பிரசாத்தை காப்பாற்ற முயன்றனர். அப்போது அந்த கும்பல் தலைமை காவலர் மற்றும் பெண் காவலரையும் சரமாரியாக தாக்கினர்.

கும்பலிடம் இருந்து ராம் பிரசாத்தைக் காப்பாற்றிய போலீசார் காவல் நிலையத்துக்குள் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். காரில் வந்த கும்பல் தாக்கியதில் காயம் அடைந்த தலைமை காவலர் மற்றும் பெண் காவலர் சூலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். தாக்கிய கும்பலில் இருந்த சண்முகப்பிரியாவும் காவல் நிலையத்தில் மயங்கி விழுந்ததால் அவரையும் அவரது குடும்பத்தினர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.