கோட்டையில் இருந்த தகவல்கள் எங்கு கசிகின்றன… ஓட்டையை கண்காணிக்க ரகசிய உத்தரவு… கடும் அப்செட்டில் முதல்வர்.!!

சென்னை: மின்சார கொள்முதல் தொடங்கி சட்டசபை இடமாற்றம் வரை பல தகவல்களை பாஜக தலைவர் அண்ணாமலை பேசி வருவது திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நம்முடைய கோட்டையில் எங்கு ஓட்டை உள்ளது. யார் மூலமாக தகவல்கள் கசிகின்றன என்று கண்காணிக்க உத்தரவிட்டுள்ளாராம் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

மாமல்லபுரத்தில் புதிய சட்டசபையை அமைக்க திமுக அரசு திட்டமிட்டுள்ளதாகவும், இந்த மெகா திட்டத்தின் மூலம் கோபாலபுரம் குடும்பத்தினர் விஞ்ஞான முறையில் மெகா ஊழல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, மின்வெட்டால் நாள்தோறும் தமிழக மக்கள் தூக்கத்தை இழந்து தவிக்கும் அளவுக்கு திமுகவின் ஒராண்டு ஆட்சி வேதனையாக உள்ளது என்றார்.

இத்தகைய சூழலில் பெரிய ஊழலுக்கு வழிவகுக்கும் வகையில் தமிழக சட்டசபையை மகாபலிபுரத்திற்கு மாற்றும் வேலைகளில் திமுத அரசு இறங்கியுள்ளது. இதற்காக அங்கு 6000 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு சட்டசபை பணிகள் துவங்க அரசாணை போட்டுள்ளனர். இதை பாஜக எதிர்க்கும் என்பதற்காக சில திருட்டு வேலைகளையும் செய்து வருகின்றனர் என்று அண்ணாமலை குற்றம்சாட்டினார்.

மேலும் அங்கு திமுக அலுவலகம் அமைக்கவும் இடம் வாங்கப்பட்டுள்ளது. இதற்காக திமுகவை சேர்ந்த ஆறு அமைச்சர்கள் பினாமி பெயரில் மாமல்லபுரம் பகுதியில் 100 ஏக்கர் வரை நிலம் வாங்கியுள்ளனர். கோபாலபுரம் குடும்பத்தில் உள்ள நான்கு பேர் பணம் சம்பாதிப்பதற்காக புதிய சட்டமன்றத்தை அமைக்க முயற்சிக்கின்றனர். இதை பாஜக ஒருபோதும் அனுமதிக்காது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சிக் காலத்தில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் பிரம்மாண்டமாக கட்டப்பட்டது. அதனை 2010 இல் மார்ச் 13 ஆம் தேதி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் திறந்து வைத்தார். ஆனால், 2011 இல் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து ஜெயலலிதா முதல்வர் ஆன உடனே, புதிய தலைமைச் செயலக கட்டடம் பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டது.

பத்து ஆண்டுகளுக்கு பிறகு தற்போது திமுக மீண்டும் ஆட்சி அமைத்துள்ள நிலையில், கருணாநிதியின் வாழ்நாள் கனவை நிறைலேற்றும் விதத்தில், பல்நோக்கு மருத்துவமனை செயல்பட்டு வரும் ஓமந்தூரார் அரசின் தோட்டம் மீண்டும் தலைமைச் செயலகமாக மாற்றம் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த எதிர்பார்ப்புக்கு மாறான விளக்கம் சில மாதங்களுக்கு முன் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு, தலைமைச் செயலகம் மாற்றம் குறித்த யூகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், புதிய சட்டசபையை மாமல்லபுரத்தில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக அண்ணாமலை அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளார். இதுபோல கடந்த சில மாதங்களுக்கு முன்பு துபாய் சென்ற போது 5000 கோடி முன்னதாக சென்று விட்டது என்று குற்றம் சாட்டினார் அண்ணாமலை. தனியார் நிறுவனத்தில் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவது பற்றியும் பகிரங்கமாக புகார் கூறினார் அண்ணாமலை.

கோட்டையில் இருந்து இந்த தகவல்கள் எந்த ஓட்டை வழியாக கசிகின்றன என்று யோசித்து வருகிறாராம் முதல்வர் மு.க ஸ்டாலின். அரசின் கொள்கை முடிவுகள் எப்படி வெளியே கசிகின்றன என்று கடும் அப்செட்டில் இருக்கிறாராம். அரசு உயர் அதிகாரிகள் மீது முதல்வர் ஸ்டாலின் கடும் கோபத்தில் இருப்பதாக சொல்கிறது கோட்டை வட்டாரம்.

அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். அவரது பேச்சில் படித்த பலரும் இன்றைக்கும் அவருடைய நட்பு வட்டாரத்தில் இருக்கிறார்களாம். ஆளுங்கட்சி மீது ஏதோ சில காரணங்களுக்காக அதிருப்தியில் இருக்கும் உயரதிகாரிகள் சிலர்தான் இதுபோன்ற முக்கிய கொள்கை முடிவுகள் குறித்த தகவல்கள் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு கசிய விடுவதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்கட்சியினருக்கு குறிப்பாக அண்ணாமலைக்கு தகவல் தரும் அந்த உளவாளி யார் என்பதை உடனடியாக கண்டறியும் முயற்சியில் இருக்கிறாராம் முதல்வர். அரசின் கொள்கை முடிவுகள் இதுபோல வெளியே கசிந்து விடக்கூடாது என்பதால் அண்ணாமலையுடன் தொடர்பில் இருக்கும் அதிகாரிகள் யார் என்று ரகசிய விசாரணை நடைபெற்று வருகிறதாம்.