1500 கோயில்களுக்கு ரூ.1000 கோடி செலவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது-அமைச்சர் சேகர்பாபு தகவல்.!!

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 1500 கோயில்களுக்கு ரூ.1000 கோடி செலவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல் அளித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இன்று சென்னை பெரம்பூர் அருள்மிகு சேமாத்தம்மன் திருக்கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் குறைபாடுகள் இருப்பதாக புகார் வந்ததால் அதனை நேரில் சென்று ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

அந்த வகையில் சட்டமன்றத்தில் உறுப்பினர் தாயகம் கவி மற்றும் மேயர் வேண்டுகோளை ஏற்று சேமாத்தம்மன் கோயிலினை ஆய்வு செய்துள்ளோம். இதில் சில இடங்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளது. திருக்குளம் வற்றியுள்ளது. இதுகுறித்தான நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை பெரம்பூர் பகுதியில் உள்ள சேமாத்தமன் கோயிலில் உள்ள குளத்தை 70 லட்சம் ரூபாய் செலவில் சீரமைக்கும் பணிகள் நடைபெற உள்ளது. 1000 ஏக்கர் அளவிற்கு நிலங்களை மீட்டெடுக்கும் பணியை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொண்டு வருகிறது. தமிழக முதலமைச்சரை ஆதீனங்கள் சந்தித்த போது, பட்டினம் பிரவேசம் குறித்து தொன்மையாக நடைபெறும் வழக்கம் இது என ஆதீனங்கள் குறிப்பிட்டனர்.

இதனை தொடர்ந்து முதல்வர் இதற்கு அனுமதி அளித்துள்ளார். மனித நேயத்தோடு இதற்கு மாற்று ஏற்பாடு உள்ளதா என்பதை பரிசீலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் ரீதியாக தமிழகத்தில் ஒளிமயமான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு 1500 கோயில்களுக்கு 1000 கோடி ரூபாய் செலவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது திரு.வி.க நகர் சட்டமன்றத்தில் உறுப்பினர் திரு.தாயகம் கவி, மேயர் பிரியா ராஜன், சென்னை 1 மண்டல இணை ஆணையர் ந.தனபால், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீலேகஸ்ரீசடகோப ராஜாமானுஜர் ஜீயர், திருக்கோயில் செயல் அலுவலர் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.