தமிழகத்தின் நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கையைச் சென்னை தலைமைச் செயலகத்தில் நிதி அமைச்சர் மரிய வில்சன் நேற்று (16.06.2026) வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து அவர் கூறுகையில், ‘தமிழக அரசின் கடன் ரூ. 5 லட்சம் கோடியில் இருந்து ரூ.10 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் கடன் இரு மடங்கு அதிகரித்துள்ளது முன்னதாக ரூ. 5 லட்சம் கோடியில் இருந்த கடன், தற்போது ரூ.10 லட்சம் கோடி என இரு மடங்கு அதிகரித்துள்ளது.
இதன்மூலம் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வரலாறு காணாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளது. அதோடு இந்தியாவின் முதன்மை வருவாய் ஈட்டும் மாநிலமாகத் திகழ்ந்த தமிழ்நாடு தற்போது தேசிய சராசரிக்கும் கீழே சரிந்துள்ளது. தமிழ்நாட்டின் உண்மையான கடன் அளவு ரூ.13.18 லட்சம் கோடி ஆகும். அதே சமயம் வருவாய் பற்றாக்குறை ரூ.78 ஆயிரத்து 324 கோடியாக உள்ளது. அதாவது வருவாய் பற்றாக்குறை கொரானா காலத்தை விட அதிகரித்துள்ளது.
தனி நபர் கடன் ரூ.1.28 லட்சம் ஆக உயர்ந்துள்ளது. அதாவது தமிழகத்தில் ஒவ்வொரு தனி நபர் மீதான கடன் சுமை கடந்த 5 ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரட்டிப்பாகி, 1,28,934 ரூபாயாக உள்ளது. அன்றாட செலவுகளுக்கே அரசு கடன் வாங்குகிறது. இதனால் மொத்த வருவாயில் 22.8 % வட்டிக்கே செல்கிறது’ எனத் தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டின் நிதி நிலைக் குறியீடுகள் (2025-26ஆம் நிதி ஆண்டின் முதல்கட்ட கணக்குகள்) குறித்த ஆறு முக்கியத் தரவுகள் வெளியாகியுள்ளன.
அதன்படி, மாநிலத்தின் மொத்த நிலுவைக் கடன் 10 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 28.3 சதவீதமாகும். மேலும், வருவாய்ப் பற்றாக்குறை வரலாற்றிலேயே இதுவரை இல்லாத உச்சமாக 78,324 கோடி ரூபாயை எட்டியுள்ளது. மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் மாநிலத்தின் சொந்த வரி வருவாயின் சதவீதம் மிகக் குறைந்த அளவாக 5.45 சதவீதமாக (SOTR / GSDP) பதிவாகியுள்ளது. மொத்த வருவாய் வரவுகளில் வட்டிச் செலவினத்தின் சதவீதம் 22.8 சதவீதமாக (Interest Payments / TRR) உள்ள நிலையில், மொத்த வருவாய் வரவுகளில் பொறுப்பேற்ற அல்லது தவிர்க்க இயலாத செலவினத்தின் சதவீதம் 64.4 சதவீதமாக உள்ளது.இறுதியாக, அரசு பொதுத்துறை நிறுவனங்களின் கடன் பொறுப்புகளை உள்ளடக்கிய உண்மையான கடன் அளவு 13.18 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக முதல்வர் விஜய் பதவியேற்றபோது நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.





