பாக். எல்லையில் மீன்பிடிக்க சென்ற 500 குமரி மீனவர்கள் என்ன ஆனார்கள்..? தொடர்பு கொள்ள முடியாமல் உறவினர்கள் தவிப்பு..!

நாகர்கோவில்: இந்தியா- பாகிஸ்தான் இடையே கடந்த நான்கு நாட்கள் மோதல்கள் நடைபெற்று வந்தன. இரு நாடுகளுக்கும் இடையே தாக்குதல் முடிவுக்கு வந்தாலும் பதற்றம் தணியவில்லை.

இந்த நிலையில் தீவிரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இன்னும் முடியவில்லை என்று இந்திய விமானப்படை அறிவித்துள்ளது. குமரி மாவட்டத்தில் இருந்து ஈஸ்டர் பண்டிகைக்கு பின்னர் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற குமரி மாவட்ட மீனவர்கள் ஏராளமானோர் குஜராத் மற்றும் பாகிஸ்தான் எல்லை அருகே மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இவர்களுக்கு இரு நாடுகளுக்கு இடையான போர் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளதா? அவர்கள் தொடர்ந்து மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனரா? அல்லது அந்த பகுதி துறைமுகங்களில் கரை திரும்பியுள்ளார்களா? என்பது தொடர்பான தகவல்கள் உறவினர்களுக்கு முழுமையாக தெரியவரவில்லை.

இதனால் அவர்கள் அச்சத்தில் உள்ளனர். மேலும் மீனவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும் அவர்களது உறவினர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் குமரி மாவட்டம் தூத்தூர் மண்டலத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மீனவர்கள் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இவை ஒருபுறம் இருக்க மீனவர்கள் தங்கள் விசைப்படகுகளின் உரிமையாளர்களை சாட்டிலைட் போன் மூலம் தொடர்பு கொண்டு வருவதாகவும், அவர்கள் பாதுகாப்பான இந்திய கடல் பகுதியில் மட்டும் மீன்பிடி தொழில் செய்து வருவதாகவும் இங்குள்ள மீனவர்கள் தெரிவித்தனர்.