பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் என்ன..? முழு விவரம் இதோ..!

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், தேர்வு அறைக்கு செல்போன் கொண்டுவரவும் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறைகேடுகளை தடுக்க மூன்றாயிரத்து 100 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 281 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களுக்கு 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய காவலர்கள் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர்கள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் அமைக்கப்பட்டுள்ள முழுநேரத் தேர்வுக் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு சந்தேகங்களுக்கு தெளிவுபெறவும், புகாரளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒழுங்கீன செயல்களுக்கு உடந்தையாகவோ அல்லது ஊக்கப்படுத்தவோ பள்ளி நிர்வாகம் முயன்றால், பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் வழிகாட்டு நெறிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வில் தவறு செய்தால் மாணவர்களுக்கு விதிக்கப்படும் தண்டனை குறித்த விவரங்களையும் அரசுத் தேர்வுகள் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாணவர்கள் காப்பி அடித்தால் ஓராண்டு முதல் இரண்டு ஆண்டுகள் வரை பொதுத்தேர்வு எழுத தடை விதிக்கப்படும்.

தேர்வறையில் துண்டு தாள்களை தன் வசம் வைத்திருந்தால், அந்த மாணவர் எழுதிய அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதுடன் ஓராண்டுக்கு தேர்வெழுத தடை விதிக்கப்படும். ஆள்மாறாட்ட நடவடிக்கையில் ஈடுபட்டால், பொதுத் தேர்வு எழுத நிரந்தர தடை விதிக்கப்படுவதுடன், அம்மாணவர் எழுதிய தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடைத்தாட்களில் விடைகளைத் தவிர்த்து வேறு விஷயங்களை எழுதினால் சம்பந்தப்பட்ட மாணவர் எழுதிய பாடத் தேர்வு ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விடைத்தாள்களை தேர்வு அறையில் இருந்து வெளியே அனுப்பினால் மூன்றாண்டுகள் தேர்வெழுத தடை விதிக்கப்படும் என்றும் அரசுத் தேர்வுகள் துறை தண்டனை விவரங்களில் தெரிவித்துள்ளது.