என்னது!! நான் துணை முதலமைச்சரா..? நகைசுவையாக பதிலளித்த உதயநிதி..!

முதல் முறையாக கேலோ இந்தியா வரும் ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் நடைபெற உள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை செம்மஞ்சேரியில் உள்ள செயிண்ட் ஜோசப் கல்லூரி மற்றும் அச்சமில்லை தொண்டு நிறுவனம் இணைந்து பார்வை குறைபாடுள்ள மாற்று திறனாளிகளுக்கான விளையாட்டு திருவிழா நிகழ்ச்சியை நடத்தினர். இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இன்று தொடங்கிய விளையாட்டு போட்டிகள் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதில் தமிழகம் முழுவதும் சென்னை திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 17 மாவட்டங்களில் இருந்து 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கிரிக்கெட், வாலிபால், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், உள்ளிட்ட 7 போட்டிகளில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நிகழ்வில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இந்த நிகழ்வில் விளையாட்டுத் துறை அமைச்சராக நான் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். பொதுவாக சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள வேண்டும், பரிசுகளை வழங்க வேண்டும். நான் கூட பாசமாக அழைக்கிறார்கள் என நினைப்பேன். வந்ததற்கு பிறகு தான் தெரியும் நிறைய கோரிக்கைகளை வைக்க தான் அழைத்தார்கள் என தெரியும், உரிமையோடு நீங்கள் கோரிக்கையை வைத்துள்ளீர்கள். உங்களுடைய குடும்பத்தில் ஒருவராக நீங்கள் வைத்த நம்பிக்கைக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

பார்வை மாற்று திறனாளிகளுக்கு அரசு கோட்டாவில் சரியான அரசு பணி இட ஒதுக்கீடு கேட்டுள்ளீர்கள். இதனை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று சரியான தீர்வை ஏற்படுத்துவேன். அடுத்த சட்டபேரவை மானிய கோரிக்கையின் போது நிச்சயம் பார்வை மாற்று திறனாளிகளை மனதில் வைத்து பல்வேறு திட்டங்களை முதல்வர் அறிவிப்பார்கள். பெரிய நிதி ஒதுக்கீடு விளையாட்டுத் துறைக்கு இல்லை. அதனால் தான் அறக்கட்டளை ஏற்படுத்தி உதவி வருகிறோம். தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் கேலோ இந்தியா விளையாட்டு முதன் முதலாக நடத்தப்பட உள்ளது. அதில் பங்கேற்க உங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும்.

கேலோ இந்தியா தமிழ்நாட்டில் நடைபெற தயாராகி கொண்டிருக்கிறோம். இதற்காக மத்திய அரசிற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கேலோ இந்தியாவை சிறந்த முறையில் நடத்துவோம். சென்னை, கோயம்புத்தூர், மதுரையில் நடத்தலாமா இல்லை, மற்ற இடங்களில் நடத்தலமா என அடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளோம்” என்றார்.

தாங்கள் துணை முதல்வர் ஆக உள்ளதாக பேச்சு அடிபடுவதாக கேட்டதற்கு எங்கிருந்து தகவல் வந்தது என தெரியவில்லை என நகைச்சுவையாக கூறினார்.