ஒட்டுமொத்த உலகமும் இந்தியர்களிடம் நெருங்கி வர முடியாத விஷயம் ஒன்று உண்டு என்றால், அது வாகனங்களை ஆல்டி ரேஷன் செய்யும் திறன் என்றே சொல்லலாம். எந்த வாகனமாக இருந்தாலும் சரி, அதை தங்கள் வசதிக்கு ஏற்ப மாற்றிக் கொண்டு, அதையே வியாபாரத்திற்கான தளமாக பயன்படுத்திக் கொள்வதில் இந்தியருக்கு நிகர வேறு யாரும் இருக்க முடியாது.
நம்மூரில் பெரும்பாலான கடைத்தெருக்களில், சிறிய வகை லோடு ஆட்டோக்களை உணவகமாக மாற்றி தெருவோர ஹோட்டல்களை நடத்தி வரும் பலரை பார்த்திருப்போம். பைக்கின் முன்பகுதியை மட்டும் வைத்துக் கொண்டு, அதனுடன் கட்டை வண்டியை இணைத்து லோடு வாகனமாக பயன்படுத்தி சாமானிய மக்கள் பலர் வாழ்வாதாரம் ஈட்டி வருகின்றனர்.
இது எல்லாவற்றையும் விட, ஜீப், கார் போன்ற வாகனங்களில் நிறைய ஆல்டரேஷன் செய்து, அதை திருமணங்களுக்கான வரவேற்பு வாகனமாக பயன்படுத்துவதை நாம் நிறைய இடங்களில் பார்த்திருப்போம். இதில் இன்னும் கொஞ்சம் புதுமையை புகுத்தி, பார்க்கும் எல்லோரையும் அசர வைக்கும் அளவுக்கு புதிய கண்டுபிடிப்பு ஒன்றை உருவாக்கியுள்ளார் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த குட்டூ சர்மா என்பவர்.
இந்தியாவில் இருப்பதிலேயே மிக சின்ன காராக அறியப்படும் நானோ காரை, ஹெலிகாப்டராக மாற்றம் செய்துள்ளார் இவர். இந்த பட்ஜெட் ஹெலிகாப்டர் வானத்தில் எல்லாம் பறக்காது. ஆனால், வாழ்க்கையில் ஒருமுறையாவது ஹெலிகாப்டரில் சென்றுவிட வேண்டும் என்ற கனவு பலருக்கும் எட்டாக் கனியாக உள்ள நிலையில், அதை ஓரளவுக்கு திருப்தி செய்யும் விதமாக இவரது கண்டுபிடிப்பு அமைந்துள்ளது. வெளித் தோற்றத்திலும், உள்ளே உள்ள இண்டீரியர் அமைப்பிலும், நானோ காரை ஹெலிகாப்டர் போன்றே உருமாற்றம் செய்துள்ளார் குட்டூ சர்மா.
திருமண நிகழ்வுகளுக்கு வழக்கமான கார்கள் மற்றும் அலங்கார ரதங்களுக்கு மிகுந்த வரவேற்பு இருப்பதை புரிந்து கொண்ட அவர், அதையே தனது மூளைக்கு ஏற்ப மாற்றி பயன்படுத்தி இந்த நேனோ ஹெலிகாப்டரை உருவாக்கிவிட்டார். நேனோ காரை ஹெலிகாப்டராக மாற்றுவதற்கு, ரூ.1.5 லட்சம் அவருக்கு செலவு ஏற்பட்டது. இது தவிர, கொஞ்சம் அட்வான்ஸ்டு சிஸ்டம் சிலவற்றை மேம்படுத்திய வகையில் ரூ.50 ஆயிரம் செலவானது.
கடந்த 2019ஆம் ஆண்டிலும், பீகாரைச் சேர்ந்த மித்திலேஷ் பிரசாத் என்பவர் நானோ காரை ஹெலிகாப்டர் போல ஆல்டிரேஷன் செய்தார். பைலட் ஆக வேண்டும் என்ற தனது கனவு நனவாகவில்லை என்ற சூழலில், நானோ ஹெலிகாப்டரை உருவாக்கி தனது ஆசையை தீர்த்துக் கொண்டார் அவர்.
Leave a Reply