சென்னை:”மகளிர் உரிமை தொகையான- மாதம் 1,000 ரூபாயை விரைவில் வழங்க போகிறோம்,” என, முதல்வர் ஸ்டாலின் பேசினார். திண்டுக்கல் மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், மலையளவு ஊழல்கள் செய்யப்பட்டன. இதுபற்றி லஞ்ச ஒழிப்பு போலீசார் வாயிலாக விரிவாக விசாரணை நடத்தி-, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சி ஒப்பந்தத்தில் 464 கோடி ரூபாய் ஊழல்; கோவை மாநகராட்சி திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தத்தில் 346 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. பத்தாண்டுகளாக சீரழிக்கப்பட்ட தமிழகத்தை சீரமைத்தாக வேண்டும். அடகு வைக்கப்பட்ட மாநில உரிமைகளை மீட்டாக வேண்டும்.
எதிர்காலத்துக்கு தேவையான திட்டங்களை நிறைவேற்றியாக வேண்டும். பழனிசாமி,- பன்னீர்செல்வம் காமெடி நாடக கம்பெனி, சீரழித்த நிதி நிலைமையை, கொஞ்சம் கொஞ்சமா மீட்டு வருகிறோம். கடன் மேல கடன் வாங்கி, அதற்கு வட்டி கட்ட முடியாமல், வட்டி கட்ட கடன் வாங்கி, அதுக்கு வட்டி கட்டி உள்ளனர். இவ்வாறு, 5 லட்சம் கோடி ரூபாய் கடனில், தமிழகத்தை தள்ளி, கஜானாவை கபளீகரம் செய்து விட்டனர். இந்த நிலையில் இருந்து, தமிழகத்தை மீட்டு, ‘மகளிர் உரிமை தொகை’யான மாதம் 1,000 ரூபாயை விரைவில் வழங்க போகிறோம். யாரையும் நாங்கள் ஏமாற்றப் போவதில்லை. இந்த ஸ்டாலின் ஒரு வாக்குறுதியை கொடுத்தால், அதை நிச்சயம் நிறைவேற்றுவான்.இவ்வாறு அவர் பேசினார்.
Leave a Reply