சட்லஜ் நதியில் இருந்து மீட்கப்பட்ட வெற்றி துரைசாமி உடல்.. ..

சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும், மனிதநேயம் ஐஏஎஸ் அகாடமி அமைப்பை நடத்தி வருபவருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி.

இவர், கடந்த பிப். 4 ஆம் தேதியன்று சென்ற கார் கஷாங் நுல்லா மலைப்பாதையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சட்லெஜ் ஆற்றில் விழுந்தது. இதில், உயிருக்கு ஆபத்தான நிலையில் கோபிநாத் என்பவர் மீட்கப்பட்டார். வெற்றி துரைசாமியும், உள்ளூரை சேர்ந்த கார் ஓட்டுநர் தன்ஜினும் மாயமாகினர். பின்னர் தன்ஜினின் சடலம் மீட்கப்பட்டது.

தேசிய மீட்பு படையினரும் தேடுதல் பணியின் போது ஆற்றில் கவிழ்ந்த காரில் வெற்றியின் இருந்து செல்போன் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து, ஆற்றங்கரையோரம் உள்ள பாறையில் மனித மூளையின் திசுக்கள் கண்டெடுக்கப்பட்டு அம்மாநில தடயவியல் மையத்தில் டிஎன்ஏ ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும், விபத்து நடந்தபோது வெற்றி துரைசாமி ஆற்றில் விழுந்ததைப் போல, ஒரு பொம்மையை மாதிரியாக வைத்து அதன் போக்கை காவல்துறையினர் கண்காணித்தனர்.

இதற்கிடையே, வெற்றி துரைசாமியின் டிஎன்ஏ பரிசோதனை தொடர்பாக இமாச்சல் காவல்துறை சார்பில் தமிழ்நாடு காவல்துறை கடிதம் எழுதப்பட்டது. இதனையடுத்து சைதை துரைசாமி மற்றும் அவரது மனைவியின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இமாச்சல் தடயவியல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு கிடைக்கப்பெற்ற ரத்த மாதிரிகளுடன் காவலர்கள் தடயவியல் ஆய்வகத்திற்கு புறப்பட்ட நிலையில், அந்த செய்தி வந்தடைந்தது.

8 நாட்களாக தேடப்பட்ட வந்த வெற்றியின் உடலை மீட்பு படை வீரர்கள் சட்லஜ் நதியில் இருந்து மீட்டனர். விபத்து நிகழ்ந்த பகுதியில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் வெற்றியின் உடல் கிடைக்கப்பெற்றுள்ளது. நதியின் அடியில் இருந்து வெற்றியின் உடலை ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மீட்டு வெளிக்கொண்டு வந்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக வெற்றியின் உடல் ரெகாங்புவாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.