கோவை – பெங்களூர் இடையே வந்தே பாரத் விரைவு ரயில் சேவைகளை பிரதமர் மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்…

பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் அயோத்திக்கு பயணம் மேற்கொள்கிறார். அப்போது சுமார் ரூ. 11,100 கோடி மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களை அவர் நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டுகிறார். அயோத்தி தாம் சந்திப்பு ரயில் நிலையத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில், நாட்டின் முதல் அம்ருத் பாரத் என்ற அதி விரைவு பயணிகள் ரயிலை பிரதமர் கொடி அசைத்து தொடங்கி வைக்கிறார். இது, ரயில் பயணிகளுக்கு மேம்பட்ட வசதிகளை வழங்குகிறது. இதோடு ஆறு புதிய வந்தே பாரத் ரயில்களையும் அவர் கொடி அசைத்துத் தொடங்கி வைக்கிறார். அதில் கோவை – பெங்களூரு இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை ஒன்றும். இந்நிகழ்ச்சியில் பாராளுமன்ற உறுப்பினர் பி ஆர் நடராஜன், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் அனைத்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

கோவை – பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் தினமும் இருமுறை இயக்கப்பட உள்ளது. கோவையில் காலை 5 மணிக்கு புறப்படும் இந்த ரயில் சேலத்திற்கு 7.20, தருமபுரிக்கு 8.32, ஒசூருக்கு 10.05, பெங்களூரை பகல் 11.30 மணிக்கு சென்று அடைகிறது. மறுமாா்க்கத்தில் நண்பகல் 1.40 மணிக்கு பெங்களூரில் இருந்து புறப்படும் இந்த ரயில் ஒசூருக்கு 2.50, தருமபுரிக்கு 4.16, சேலத்திற்கு 5.53, கோவையை இரவு 8 மணிக்கு வந்து அடைகிறது. கோவை – பெங்களூரு இடையிலான 380 கிலோ மீட்டர் தூரத்தை வந்தே பாரத் ரயில் 5 மணி நேரம் 40 நிமிடங்களில் சென்றடைகிறது. இந்த ரயிலில் சாதாரண சேர் கார் பெட்டிகளில் டிக்கெட் கட்டணம் குறைந்தபட்சம் ரூ. 1,000, எக்ஸிக்யூட்டிவ் கார் டிக்கெட் குறைந்தபட்சம் 1,850 ஆகவும் இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

உதய் எக்ஸ்பிரஸ் ரயிலை விட புதிய வந்தே பாரத் ரயிலில் சென்றால் சுமார் 1 மணி நேரம் 5 நிமிடம் மிச்சமாகும். அதாவது 5.40 நிமிடத்தில் போய்விட முடியும். தற்போது தனியார் பஸ்களில் கோயம்புத்தூரில் இருந்து பெங்களூர் வரை குறைந்தபட்சம் 7 மணி நேரம் ஆகிறது. இந்த வந்தே பாரத் ரயில் தான் மிகக் குறைவான நேரத்தில் பெங்களூர் போக முடியும் என்பதால் வரவேற்பு உள்ளது. மேலும் சேலத்தில் இருந்து தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக பெங்களூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம் செல்வதால் ரயிலுக்கு வரவேற்பு இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.