தடுப்பூசியா.. நானா நெவர்… ஜோகோவிச் “நச் பதில்.!!

எப்போதுமே ஆஸ்திரேலிய ஓபன் தொடர் பரபரப்பாக இருக்கும். ஆனால் இந்தாண்டு நடைபெற்ற வழக்கத்திற்கு மாறாக தொடர் ஆரம்பாகும் முன்பே பரபரப்பாக பேசப்பட்டது.

காரணம் உலகின் நம்பர் 1 டென்னிஸ் வீரர் ஜோகோவிச். ஓபன் தொடரில் பங்கேற்கும் வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்கள் என அனைவருமே கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் ஜோகோவிச் தடுப்பூசி செலுத்தவில்லை. அதன் மீது நம்பிக்கை இல்லையென்றும் அந்த முடிவில் தலையிட யாருக்கும் உரிமையில்லை எனவும் பிடிவாதம் பிடித்தார்.

இந்த பிடிவாதத்துக்கு ஆஸ்திரேலிய அரசு முதல் கடிவாளம் போட்டது. நம்பர் 1 டென்னிஸ் வீரராக திகழ்ந்தாலும் எங்கள் சட்டத்திற்கு முன்பு ஒன்று தான் என சொல்லாமல் சொன்னது. செர்பியா நாட்டைச் சேர்ந்த ஜோகோவிச்சுக்கு, அந்நாடு தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததற்கான மருத்துவ விலக்கு சான்றிதழை வழங்கியது. அதை காட்டினால் ஆஸ்திரேலிய அரசு விட்டுவிடும் எண்ணிவிட்டார் போல. ஆனால் அவரது கணக்கு தப்புக்கணக்கானது. ஆம் கடந்த ஜன.5ஆம் தேதி துபாய் வழியாக மெல்போர்ன் விமான நிலையத்துக்கு வந்து இறங்கினார்.

அப்போது விமான நிலையத்தில் அவரின் ஆவணங்களைச் சோதனை செய்த அதிகாரிகள் மருத்துவ விலக்கு சான்றிதழை ஏற்க மறுத்தனர். அவரது விசாவை அரசு ரத்து செய்தது. தடுப்பு காவலில் அடைத்து ஹோட்டலில் தனிமைப்படுத்தவும் செய்தனர். ஜோகோவிச்சை நாடு கடத்தும் வேலையிலும் இறங்கியது. ஜோகோவிச் ஆஸ்திரேலிய நீதிமன்றத்தை நாடினார். வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. நீதிமன்றம் ஆஸ்திரேலிய அரசின் உத்தரவை ரத்து செய்தது. ஜோகோவிச் போட்டியில் கலந்துகொள்ள எந்த தடையும் இல்லை எனவும் கூறியது.

ஆனால் மீண்டும் ஜோகோவிச்சின் விசாவை ரத்து செய்தது. “ஜோகோவிச் தடுப்பூசி எதிரானவர். அவரை அனுமதித்தால் நாட்டில் மோசமான முன்னுதாரணமாகிவிடும். மக்கள் மத்தியில் தடுப்பூசிக்கு எதிரான மனநிலை உருவாகும்” என அரசு விளக்கமும் அளித்தது. மீண்டும் நீதிமன்ற படியேறினார் ஜோகோவிச். ஆனால் இம்முறை நீதிமன்றமும் கைவிட்டது. ஆஸ்திரேலிய சட்டப்படி அவருடைய விசா ரத்தானால் 3 ஆண்டுகள் அந்நாட்டிற்குள் நுழைய முடியாது. இதனால் சொந்த நாட்டுக்கே திரும்பினார். இதன் காரணமாக ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தார்.

இதுவரை 20 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார் ஜோகோவிச். இந்தாண்டு பட்டம் வென்றால், பெடரர், நடால் ஆகியோரை விட அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவர் என்ற சாதனையை படைத்திருப்பார். ஆனால் அவரின் பிடிவாதத்தால் சாதனையை இழந்துவிட்டார். மாறாக ரபேல் நடால் இம்முறை கோப்பையை முத்தமிட்டார். அந்த சாதனை அவரை சென்று சேர்ந்தது. இதையடுத்து மே மாதம் நடைபெறும் பிரெஞ்சு ஓபன் போட்டியில் தடுப்பூசி போடவில்லை என்றால் ஜோகோவிச்சை அனுமதிக்கவே முடியாது என பிரான்ஸ் நாட்டு அரசும் தீர்க்கமாக சொல்லிவிட்டது.

இதற்குப் பிறகு ஜோகோவிச்சின் மனநிலை மாறும் என சொல்லப்பட்டது. ஆனால் அவரோ அதில் மாற்றமே இல்லை என உறுதியாக நிற்கிறார். சமீபத்தில் ஊடகத்திற்கு பேட்டியளித்த அவர், “நான் தடுப்பூசிக்கு எதிரானவன் அல்ல. ஆனால் அதனை போட வேண்டுமா, வேண்டாமா என்ற தனி நபருக்கான உரிமையை ஆதரிக்கிறேன். எனது சிறுவயதில் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டேன். ஆனால் உங்கள் உடலில் நீங்கள் எதை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தேர்வு செய்தற்கான சுதந்திரத்தை நான் ஆதரிக்கிறேன். இதற்காக எதிர்காலங்களில் கோப்பைகளை இழக்கவும் தயாராக இருக்கிறேன்” என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.