கோவை ரயில் மோதி அடையாளம் தெரியாத மூதாட்டி பலி..

கோவை சிங்காநல்லூர்-கோவை ரெயில்வே தண்டவாளம் பீளமேடு ரெயில் நிலையம் அருகே 70 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் ரெயில் மோதி இறந்து கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது குறித்து கோவை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அவர் பச்சை நிற பூ போட்டு இருந்த சேலை அணிந்திருந்தார். பின்னர் போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ரெயில் மோதி இறந்து கிடந்த மூதாட்டி யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து தெரியவில்லை. அவர் ரெயில் தண்டவாளத்தை கடந்தபோது ரயில் மோதி இறந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வருகின்றனர்.