உக்ரைன் போர் விவகாரம்: இந்திய நிலைப்பாட்டை குவாட் நாடுகள் ஏற்பு-புகழும் ஆஸ்திரேலியா.!!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரில் இந்தியாவின் நிலைப்பாடை குவாட் நாடுகள் அமைப்பு ஏற்றுக் கொண்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி போரை உடனடியாக நிறுத்த தனது அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதற்கு எந்த நாடும் வருத்தம் தெரிவிக்காது என ஆஸ்திரேலியா தெரிவித்து இருக்கிறது.

ரஷ்யாவின் போர் நடவடிக்கை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு 1957 வாக்கில் பின்பற்றிய கோட்பாட்டை அடிப்படையாக கொண்டுள்ளது. இந்தியா கண்டனம் தெரிவிப்பதற்கு பதிலாக பிரச்சினைகளை சுமூகமாக முடித்து வைப்பதற்கான சூழலை உருவாக்குவதில் தான் கவனம் செலுத்துகிறது.

உக்ரைனில் நடைபெற்று வரும் போர் பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் ஆகியோர் கலந்து கொள்ளும் விர்ச்சுவல் மாநாட்டில் தீர்வு காணப்பட இருக்கிறது. உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போரில் இந்தியாவின் நிலைப்பாடு மேற்கில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

குவாட் உறுப்பினர்களான அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்று இந்தியா ரஷ்யாவின் போர் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. மாறாக பேச்சுவார்த்தை மூலமாகவே இந்த பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என இந்தியா துவக்கம் முதலே தனது நிலைப்பாட்டில் மிகத் தீவிரமாக உள்ளது.

தொடர்ந்து மேற்கில் நடைபெற்று வரும் அதிருப்தி நிலையில், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்க முடிவு செய்திருப்பது பற்றி ஆஸ்திரேலிய உயர் கமிஷனரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இந்தியாவின் நிலைப்பாட்டை குவாட் நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன. ஒவ்வொரு நாடும் பரஸ்பர உறவு கொண்டுள்ளதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் பிரதமர் மோடி தெரிவித்து உள்ள கருத்துக்களின் அடிப்படையில், பிரதமர் மோடி தனது அனைத்து காண்டாக்ட்களையும் பயன்படுத்தி போரை நிறுத்த முயற்சித்து வருவது தெளிவாக தெரிகிறது. இந்த நடவடிக்கைக்கு எந்த நாடும் எதிர்ப்பு தெரிவிக்க முடியாது,” என இந்தியாவுக்கான ஆஸ்திரேலியா நாட்டின் உயர் கமிஷனர் பேரி ஒ ஃபாரெல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“உக்ரைன் மற்றும் ரஷ்யா விவகாரத்தில் இந்தியா எடுத்து இருக்கும் நிலைப்பாட்டிற்கு இதுவரை எந்த நாடும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. தற்போது பிரதமர் மோடி செய்து வரும் செயல்கள் அனைத்தும், இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு 65 ஆண்டுகளுக்கு முன் எடுத்துக் கூறிய கொள்கைகளையே பிரதிபலிக்கிறது,” என கூறப்படுகிறது.