உக்கடம் பெரியகுளத்தில் இயற்கை முறையில் ஆகாயத்தாமரை அகற்ற திட்டம்..!

கோவை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்களை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றில் உக்கடம் பெரிய குளத்தில் குய்க்வின் பகுதியில் 1.2 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.39.74 கோடி மதிப்பீட்டிலும், பேஸ்-1 பகுதியில் 4.3 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரூ.62 கோடி மதிப்பீட்டில் குளத்தினை புனரமைத்து, சீரமைக்கும் பணிகள் நடைபெற்றது. 100 சதவீதம் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து மக்கள் பயன்பாட்டிற்காக உக்கடம் பெரிய குளம் திறக்கப்பட்டது.
இதனிடையே உக்கடம் பெரியகுளத்தில் மீண்டும் ஆகாயத்தாமரை படர்ந்து வருகிறது. இந்த ஆகாயத்தாமரைகளை அகற்ற வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் உக்கடம் பெரியகுளத்தில் இயற்கையான முறையில் ஆகாயத்தாமரையை அகற்றப்பட உள்ளன. இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உதவியுடன் ஆகாயத்தாமரைகளை இயற்கையான முறையில் அகற்றவும், மீண்டும் வராமல் இருக்கவும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளோம். விரைவில் அதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என்றார்.