உதயநிதி ஸ்டாலினின் பொய்யான தகவல்… வெற்றிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கால் பரபரப்பு..!

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி தேர்தலில் தோல்வியடைந்த ரவி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சென்னை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில், அக்கட்சியின் இளைஞரணி செயலாளர்உதயநிதி ஸ்டாலின்போட்டியிட்டு 69, 355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை முடிவில் குற்றச்சாட்டுக்களுக்கு அடிப்படை ஆதாரங்கள் இல்லை எனக் கூறி, உதயநிதியின் மனுவை ஏற்று, அவருக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரித்து தீர்ப்பளித்தார்.

இந்நிலையில், உதயநிதி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி தேர்தலில் தோல்வியடைந்த ரவி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், தேர்தல் வேட்பு மனுவில் தவறான மற்றும் பொய்யான தகவல்களை உதயநிதி தெரிவித்துள்ளார், குறிப்பாக தனது வேட்பு மனுவோடு இணைத்து வழங்கும் படிவம்-26ல் தன் மீது எந்த கிரிமினல் வழக்கும் இல்லை என கூறியுள்ளார். ஆனால் அந்த தகவல் என்பது பொய்யானது. ஏனெனில் உதயநிதி மீது 22 வழக்குகள் நிலுவையில் உள்ளன, எனவே அவர் வேட்பு மனுவில் பொய்யான தகவல்களை குறிப்பிட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.

எனவே உதயநிதி வேட்புமனுவை ஏற்றது என்பது மக்கள் பிரதிநித்துவ சட்டத்தின் கீழ் தவறானது. ஆகையால், அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என கூறியுள்ளார். இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.