திருவள்ளூர் அருகே ஈக்காடு கண்டிகையில், சென்னை எல்லை சாலைத் திட்டம் பகுதி-3 பணிகளை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
தமிழகத்தின் வடக்கு, தென் மாவட்டங்கள், சென்னை, அதன் சுற்றுப்புற மாவட்டங்கள், அண்டை மாநிலங்களில் இருந்து வரும் கனரக வாகனங்கள், எண்ணூர் மற்றும் காட்டுப் பள்ளி துறைமுகங்களுக்கு எளிதாக சென்றடையவும், கனரக வாகன போக்குவரத்தால் ஏற்படும் நெருக்கடியை குறைப்பதற்கும், வணிக மற்றும் தொழில் வளங்களை அதிகரிக்கவும் சென்னை எல்லை சாலை அமைக்க தமிழக அரசால் திட்டமிடப்பட்டது.
அதன்படி, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் அமைக்கப்பட உள்ள இந்த சாலை திட்டத்தில் எண்ணூர் காமராஜர் துறைமுகத்திலிருந்து மகாபலிபுரம் வரை 132.87 கிமீ நீளத்துக்கு சாலை அமைக்கப்பட உள்ளது.
இதில், சென்னை எல்லை சாலைத் திட்டம் பகுதி – 1 (எண்ணூர் காமராஜர் துறைமுகம் முதல் தச்சூர் வரை ரூ. 2,122.10 கோடி மதிப்பில் 25.40 கிமீ நீள சாலை) பணி ஏற்கெனவே தொடங்கி 35 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. சென்னை எல்லை சாலைத் திட்டம் பகுதி-2 (தச்சூர் முதல் திருவள்ளூர் புறவழிச்சாலை வரை ரூ.1,539.69 கோடி மதிப்பில் 26.10 கிமீ நீள சாலை) பணி ஏற்கெனவே தொடங்கி 68 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.
இந்நிலையில், சென்னை எல்லை சாலைத் திட்டம் பகுதி-3 பணிகள் தொடக்க விழா நேற்று திருவள்ளூர் அருகே உள்ள ஈக்காடுகண்டிகையில் நடைபெற்றது. இவ்விழாவில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று, சென்னை எல்லை சாலைத் திட்டம்- பகுதி-3 பணிகளான திருவள்ளூர் புறவழிச்சாலை முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை ரூ. 2,689.74 கோடி மதிப்பில் 30.10 கி.மீ., நீளத்துக்கு, புதிய ஆறு வழிச்சாலை மற்றும் சாலையின் இருபுறமும் இரு வழி சேவை சாலைகள் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், அமைச்சர்கள் எ.வ.வேலு, சா.மு.நாசர், எம்எல்ஏக்கள் கிருஷ்ணசாமி, வி.ஜி.ராஜேந்திரன், சந்திரன், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளர் செல்வராஜ், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவன நிர்வாக இயக்குநர் பாஸ்கர பாண்டியன், திருவள்ளூர் ஆட்சியர் பிரதாப், நெடுஞ்சாலைத் துறை தலைமை பொறியாளர் பழனிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
துணை முதல்வர் தொடங்கி வைத்துள்ள சென்னை எல்லை சாலை திட்டம் பகுதி 3 பணிகள், 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நடைபெற உள்ளன. இதில், திருவள்ளூர் புறவழிச்சாலையிலிருந்து வெங்கத்தூர் வரை 10.40 கிமீ நீள சாலைப் பணிகள் ரூ. 1,133.20 கோடி மதிப்பிலும், வெங்கத்தூர் முதல் செங்காடு வரை 10 கிமீ நீள சாலைப் பணிகள் ரூ. 593.27 கோடி மதிப்பிலும் நடைபெற உள்ளன. அதே போல், செங்காடு முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை 9.70 கிமீ நீள சாலைப் பணிகள் ரூ. 963.27 கோடி மதிப்பிலும் நடைபெற உள்ளது.
இந்த சென்னை எல்லை சாலை திட்டம் பகுதி 3-ல் இரு உயர்மட்ட மேம்பாலங்கள், ஒரு ரயில்வே மேம்பாலம் மற்றும் இரு பெரிய பாலங்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும், சென்னை எல்லை சாலைத் திட்டம் பகுதி 4, ஸ்ரீபெரும்புதூர் முதல் சிங்கப்பெருமாள் கோவில் வரை 23.80 கிமீ நீளம் கொண்டது. இச்சாலை, ஏற்கெனவே ஆறு வழிச்சாலையாக அமைக்கப்பட்டுள்ளது. இச்சாலையை சென்னை எல்லை சாலை திட்டத் தரத்துக்கு ஏற்ப உயர்த்தி நுழைவு கட்டுபடுத்தப்பட்ட சாலையாக அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
சென்னை எல்லை சாலைத் திட்டம் பகுதி 5, சிங்கப்பெருமாள்கோவில் முதல் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி சந்திப்பு வரை 28.24 கி.மீ நீளம் கொண்டது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது என நெடுஞ்சாலைகள் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..