பாகிஸ்தானில் நடைபெறும் முஸ்லீம் நாடுகள் மாநாட்டில் பங்கேற்க வந்த யுஏஇ குழு ஜம்மு காஷ்மீரில் தொழில் தொடங்க ஆர்வம்.!!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தொழில் வாய்ப்புகளை ஆராய்வதற்காக, ஐக்கிய அரபு அமீரகத்தைச் (யுஏஇ) சேர்ந்த உயர்நிலை தொழில் துறை குழுவினர் மூன்று நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

இதனிடையே அனைத்து இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு பாகிஸ்தானில் நேற்று தொடங்கியது. இந்த மாநாட்டில் பங்கேற்க வந்த யுஏஇ குழுவினர் நேற்று முன்தினம் நகர் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக அனைத்து இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு (ஓஐசி) மாநாட்டில் காஷ்மீர் பிரச்சினையை பாகிஸ்தான் எழுப்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. இந்தக் கூட்டமைப்பில் யுஏஇ உள்ளிட்ட 57 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த ஆண்டும் இக்கூட்டத்தில் பாகிஸ்தான் பிரச்சினைையை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் யுஏஇ-யிலிருந்து 36 பேர் அடங்கிய குழு காஷ்மீர் வந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் துபாயில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அங்கு தொழிலதிபர்கள் கூட்டத்தில் பங்கேற்று ஜம்முவில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார்.

நகர் வந்துள்ள ஐக்கிய அரபு அமீரக தொழில் குழுவினருடன் வர்த்தக உறவுகளை வலுப்படுத்து வதற்காக ஜம்மு நிர்வாகம் தனிக் குழுவை அமைத்துள்ளது.

ஜம்மு வந்துள்ள குழுவினருக்கு மாநிலத்தில் உள்ள தொழில் வாய்ப்புகளை துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முதன்மை செயலர், தொழில், வர்த்தக துறை செயலர் மற்றும் உயர் அதிகாரிகள் அடங்கிய குழு விரிவாக விளக்கும். சுற்றுலாத் துறையில் பொதிந்துள்ள வாய்ப்புகளை விளக்கவும் திட்டமிட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஜம்மு காஷ்மீர் அரசு யுஏஇ-யில் செயல்படும் பல நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்தது. இதில் ஏஐ மாயா குழுமம், எம்ஏடியு இன்வெஸ்ட்மென்ட்ஸ் எல்எல்சி, ஜிஎல் எம்பிளாயிமென்ட் புரோக்கரேஜ் எல்எல்சி மற்றும் நூன்நிறுவனங்கள் அடங்கும். இந்நிறுவனங்களுடனான ஒப்பந்தம் மூலம் அந்நிய முதலீடுகளை ஈர்த்து அதன் மூலம் மாநிலத்தின் முதலீட்டு வாய்ப்புகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டது.

துபாயில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் பேசிய துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, ஜம்மு காஷ்மீரில் முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் அந்நிய முதலீட்டாளர்களுக்கு தேவையான உதவிகளை செய்யத் தயாராக இருப்பதாக உறுதி அளித்தார். இதைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து முன்னணி தொழில் நிறுவனங்கள் ஜம்முவில் தொழில் தொடங்க ஆர்வம் காட்டியுள்ளன.