அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியப் பொருட்களுக்கு 50 வீதம் வரி விதித்துள்ளதை தொடர்ந்து, இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் விரிசல் விழுந்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் 04 முறை தொலைபேசியில் பேச பேச முயற்சித்தும், பிரதமர் மோடி அதனை ஏற்க மறுத்து விட்டதாக ஜெர்மனி நாட்டு பத்திரிகையான பிராங்க்பர்ட்டர் ஆல்ஜெமின் (எப்ஏஇஸட்) பரபரப்புச் செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியாவுக்கு 25 சதவீதம் வரி விதித்துள்ளதோடு, கூடுதலாக, அபராத வரியாக 25 சதவீதமும் சேர்த்து 50 வீதம் வரி விதித்துள்ளார். இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அத்துடன், அமெரிக்காவின் இந்த செயல், எந்த வகையிலும் நியாயமற்றது என்று கடும் கண்டனம் தெரிவித்ததுடன், தொடர்ந்து ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவோம் என்றும் இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக, கடந்த 25 ஆண்டுகளாக சுமூக நிலையில் இருந்து வந்த இந்திய- அமெரிக்க நல்லுறவில் மோதல் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே பரஸ்பரம் இருந்த நம்பிக்கை களைந்து, இருநாடுகளும், ஒருவரை ஒருவர் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை அமெரிக்க அமைச்சர்களும் அதிகாரிகளும் விமர்சிக்க தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்காவின் வரி விதிப்பு விவகாரம், இந்தியா முழுவதும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ‘அமெரிக்க நிறுவனங்களை புறக்கணிக்க வேண்டும்’ என்கிற உணர்வு ஏற்பட தொடங்கியுள்ளது.
இந்நிலையிலேயே, இந்திய பிரதமர் மோடியிடம் பேச அதிபர் டிரம்ப் முயற்சித்ததாகவும், சமீப வாரங்களில் நான்கு முறை அவர் பேச முயற்சி மேற்கொண்டும், இந்திய பிரதமர் பேச மறுத்து விட்டார் என்று குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய பிரதமரின் செயல், அமெரிக்க அதிபர் மீது ஏற்பட்டுள்ள கோபத்தை காட்டுவதாக உள்ளது என்றும் அந்த பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது. இந்த செய்தியை பெர்லின் நகரை தலைமையிடமாக கொண்ட குளோபல் பப்ளிக் பாலிசி இன்ஸ்டிட்யூட் என்ற நிறுவனத்தின் இயக்குனர் தார்ஸ்டன் பென்னரும் பகிர்ந்துள்ளார். டிரம்ப், ஏற்கனவே வியட்நாம் அதிபருடன் போனில் அரைகுறையாக பேசி விட்டு, வர்த்தக ஒப்பந்தம் ஏற்படாமலேயே ஏற்பட்டு விட்டதாக சமூக வலைதளத்தில் அறிவித்தவர்.
அதே போன்ற சதி வலையில் தாமும் சிக்கி விடக்கூடாது என்ற முன்னெச்சரிக்கை காரணமாக, இந்தியப் பிரதமர், அமெரிக்க அதிபருடன் பேசாமல் தவிர்ப்பதாகவும், அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.