உலக நாடுகளுக்கு வரிவிதிக்க அமெரிக்க அதிபருக்கு அதிகாரம் இல்லை என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில் இந்தியா மீதான வரி விரைவில் நீக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகிறது.
அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப் உலக நாடுகள் மீது பரஸ்பர வரியை விதித்துள்ளார். அவ்வாறாக இந்தியா மீது ரஷ்யாவுடனான எண்ணெய் வணிகம் போன்றவற்றை காரணம் காட்டி 50 சதவீதம் வரியை விதித்தார் ட்ரம்ப். இதனால் இந்திய ஜவுளித்துறை, இறால் ஏற்றுமதி போன்றவை பெரும் பாதிப்பை சந்தித்துள்ள நிலையில் அதை சரிசெய்வதற்கு இந்திய அரசு முயற்சிகளை செய்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கைகள் அவரது அதிகாரத்திற்கு உட்பட்டது அல்ல என்று அவருக்கு எதிராக நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள் உலக நாடுகளுக்கு வரிகளை விதிக்க ட்ரம்புக்கு அதிகாரம் இல்லை என்றும், ட்ரம்ப் செய்திருப்பது அதிகார மீறலாகும். எனவே அவர் விதித்த வரி உத்தரவுகள் அனைத்தும் நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை ட்ரம்ப் தரப்பு மேல்முறையீடு செய்த நிலையில், மேல்முறையீட்டு நீதிமன்றமும் அதே தீர்ப்பை தற்போது வழங்கியுள்ளது. இதனால் அதிருப்தியடைந்த ட்ரம்ப் இந்த மேல்முறையீட்டை அடுத்து சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வதாக அறிவித்துள்ளார். ஆனால் அங்கேயும் இதற்கு எதிராகவே தீர்ப்பு அமையும் என கூறப்படுகிறது. அமெரிக்க நீதிமன்றத்தின் தீர்ப்பால் விரைவில் இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளுக்கும் ட்ரம்ப் விதித்த புதிய வரிகள் நீக்கப்படும் என கூறப்படுவதால் இந்திய வணிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்..