திருமண விழாவில் நடந்த சோகம்: கிணற்றின் மேல்தளம் உடைந்து விபத்து- 13 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ளது குஷி நகர். இங்கு நௌரங்கியாவில் கோலாகலமாக திருமண விழா ஒன்று நடைபெற்றது..இந்த விழாவில் கலந்து கொள்ள வந்த பெண்களும், சிறுமிகளும் நேற்று இரவு அங்கிருந்த கிணற்றின் பலகையில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

ஆனால் திடீரென அந்த பலகை உடைந்ததால் அதில் அமர்ந்திருந்த பெண்களும், குழந்தைகளும் கிணற்றுக்குள் விழுந்தனர்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் கிணற்றுக்குள் குதித்து அப்பெண்களை காக்க முயன்றனர். தகவல் அறிந்த காவல்துறையும் உடனடியாக மீட்பு பணியில் இறங்கியது.
சுமார் 15 பெண்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.. எனினும் இதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பெண்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த திடீர் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கிவிடவும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. திருமணத்திற்கு வந்து கொத்தாக உயிரிழந்ததது அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.