பிட்புல் நாய் கடித்து குதறியதில் ஒருவர் பலியான சோகம்… உரிமையாளர் மீது பாய்ந்தது வழக்கு..!

சென்னை: சென்னையில் பிட்புல் ரக நாய் கடித்ததில் கருணாகரன் என்பவர் உயிரிழந்தார். இதனையடுத்து நாயை நேற்று மாநகராட்சி ஊழியர்கள் பிடித்துச் சென்று காப்பகத்தில் அடைத்தனர்.

இந்நிலையில் இன்று உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சென்னை ஜாபர்கான் பேட்டை குமரன் நகரை சேர்ந்தவர் 43 வயதான கருணாகரன். இவரது வீட்டிற்கு அருகில் பூங்கொடி என்பவர் பிட்புல் நாயை வளர்த்து வருகிறார்.

நேற்று மதியம் சுமார் 3 மணியளவில் இந்த நாயை அழைத்துக்கொண்டு பூங்கொடி வாக்கிங் சென்றிருக்கிறார். அப்போது வீட்டிற்கு அருகே அமர்ந்திருந்த கருணாகரனை நாய் கடித்துள்ளது. ஆணுறுப்பு, தொடை என பல பகுதிகளை நாய் குதறி எடுத்ததில் கருணாகரன் உயிரிழந்தார். இதனையடுத்து நாயை மாநகராட்சி அதிகாரிகள் மீட்டு காப்பகத்திற்கு கொண்டு சென்றனர். இன்று உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.