பிரிட்டனில் அடுத்த பிரதமரைத் தோந்தெடுப்பதற்காக ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சிக்குள் நடைபெறும் போட்டி, இதுவரை இல்லாத பன்முகத்தன்மை கொண்டதாக சாதனை படைத்துள்ளது.
இந்தப் போட்டியில், அதிகபட்ச எண்ணிக்கையில் வேறுபட்ட இனம், நிறம், மதங்களைச் சேர்ந்தவா்கள் போட்டியிடுகின்றனா்.
கரோனா விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட முறைகேடு புகாா்களில் சிக்கிய தற்போதைய பிரதமா் போரிஸ் ஜான்ஸன், தனது பிரதமா் பதவியையும் ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சித் தலைவா் பதவியையும் கடந்த வாரம் ராஜிநாமா செய்தாா்.
பிரிட்டன் அரசமைப்புச் சட்டப்படி, ஆளும் கட்சித் தலைவா்தான் நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்க முடியும். அந்த வகையில், கட்சியின் தலைவரைத் தோந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு புதன்கிழமை தொடங்கியது.
இதில் போட்டியிடும் 8 பேரும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக மாறுபட்ட பின்புலங்களைக் கொண்டவா்களாக உள்ளனா்.
இந்தப் போட்டியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 2 பேர் பங்கேற்கின்றனா். அவா்களில் முன்னாள் நிதியமைச்சா் ரிஷி சுனக் போட்டியில் வெற்றி பெற்று அடுத்த பிரதமராகப் பொறுப்பேற்பதற்கு அதிக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
இன்னொருவா், அட்டா்னி ஜெனரலாகப் பொறுப்பு வகித்து வரும் சூவெல்லா பிரேவா்மன் ஆவாா். 42 வயதாகும் அந்த இருவரும், பிரிட்டனில் பிறந்தவா்கள்.
இவா்களைத் தவிர நைஜீரிய வம்சாவளியைச் சேர்ந்த மதம் மற்றும் சமூக நலத் துறை அமைச்சா் கெமி பேடனாக், இராக்கை பூா்விகமாகக் கொண்ட தற்போதைய நிதியமைச்சா் நாதிம் ஸஹாவி ஆகியோரும் பிரிட்டனின் அடுத்த பிரதமா் பதவிக்கான போட்டிக் களத்தில் உள்ளனா்.
இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ள வெளிவிவகாரங்களுக்கான சிறப்புக் குழு தலைவா் டாம் டுகென்தாட், வா்த்தகத் துறை அமைச்சா் பென்னி மாா்டன்ட் ஆகிய இருவரும் ராணுவ பின்புலத்தைக் கொண்டவா்கள். இவா்களுடன், சுகாதார மற்றும் சமூக நலக் குழு துணைத் தலைவா் ஜெரிமி ஹன்ட், வெளியுறவுத் துறை அமைச்சா் லிஸ் ட்ரஸ் ஆகியோரும் அடுத்த பிரதமா் பதவிக்கான போட்டியில் பங்கேற்றுள்ளனா்.
இறுதிச் சுற்றில் யாா் வெற்றி பெற்று பிரிட்டனின் அடுத்த பிரதமராக ஆனாலும், அதிக பன்முகத்தன்மை கொண்ட கன்சா்வேட்டிவ் தலைவா் போட்டி என்று இது வரலாற்றில் என்றும் இடம் பெறும்.
முதல் சுற்றில் ரிஷி சுனக் வெற்றி
கன்சா்வேட்டிவ் கட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்காக புதன்கிழமை நடைபெற்ற முதல் சுற்று வாக்குப் பதிவில் இந்திய வம்சாவளியைச் சோந்த ரிஷி சுனக் முதலிடத்தைப் பிடித்தாா். அவருக்கு 88 கட்சி எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்திருந்தனா். அவருக்கு அடுத்தபடியாக, பென்னி மாா்டன்ட் 67 வாக்குகளைப் பெற்றாா்.
கடைசி இரு இடங்களைப் பிடித்த ஜெரிமி ஹன்ட் (18 வாக்குகள்), நாதிம் ஸஹாவி (25 வாக்குகள்) ஆகியோா் போட்டியிலிருந்து விலக்கப்பட்டனா்.
கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவது எப்படி?
போட்டியாளர்கள் தேர்ந்தெடுப்பு
குறைந்தது 20 எம்.பி.க்களின் ஆதரவு பெற்றவர்கள் வாக்கெடுப்புக்கு தகுதி பெறுவார்கள்
முதல் சுற்று
கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பி.க்கள் வாக்களிப்பார்கள். 30 வாக்குகளுக்கு குறைவாக பெறுவோர் போட்டியிலிருந்து விலக்கப்படுவார்கள்.
இரண்டாம் சுற்று
கன்சர்வேட்டிவ் கட்சி எம்.பிக்கள் வாக்களிப்பார்கள். குறைந்தபட்ச வாக்குகளைப் பெறுபவர் போட்டியிலிருந்து விலக்கப்படுவார்.
அடுத்தடுத்த சுற்றுகள்
கட்சி எம்.பி.க்கள் வாக்களிப்பார்கள். ஒவ்வொரு சுற்றிலும் மிகக் குறைந்த வாக்குகளை பெறுபவர் போட்டியிலிருந்து விலக்கப்படுவார். இறுதியாக
2 போட்டியாளர்கள் எஞ்சும் வரை வாக்கெடுப்புகள் நடைபெறும்.
இறுதிச் சுற்று
நாடு முழுவதிலுமுள்ள சுமார் 1.6 லட்சம் கட்சி உறுப்பினர்கள் தபால் மூலம் வாக்களிப்பார்கள். வெற்றி பெறுபவர் கட்சியின் தலைவராகவும் நாட்டின் பிரதமராகவும் பொறுப்பேற்பார்.
Leave a Reply