இயற்கை கொஞ்சும் கோயம்புத்தூருக்கு இன்று 218 வது பிறந்த நாள் கொண்டாட்டம்ங்கோ..!!

தென்னிந்தியாவின் மான்ஸ்செஸ்டர், தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய நகரம், தொழில் வளர்ச்சியிலும், கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியிலும் மேம்பட்ட நகரம் என பல சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது கோயம்புத்தூர். சுவையான சிறுவாணி குடிநீருக்கும், கொங்கு தமிழுக்கும், மிதமான தட்ப வெப்ப நிலைக்கும் பெயர் பெற்ற கோவை, இலட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் இடமாக உள்ளது. சுமார் 200 ஆண்டுகளுக்குள் இந்த வளர்ச்சியை எட்டியுள்ளது. சிறுவாணி குடிநீரும், பைகாரா மின்சாரமும் தொழில் வளர்ச்சிக்கு அடித்தளமிட, தொழிலாளர்களின் அயராத கடின உழைப்பால்

 

கோவை மாநகரம் வளர்ச்சி அடைந்துள்ளது.
கோவன் என்ற பழங்குடியின தலைவன் ஆண்ட பகுதி கோவன் புத்தூர் என அழைக்கப்பட்டது. பின்னர் அது மருவி கோயம்புத்தூர் ஆகியுள்ளது. கோயம்புத்தூர் நிலப்பரப்பு ஒரு குறிப்பிட்ட அரசர்களின் ஆளுகைக்குள் கீழ் நிரந்தரமாக இருந்ததில்லை. பல்வேறு அரசுகளின் ஆளுகைக்கு கீழ் மாறி மாறி இருந்து வந்துள்ளது. திப்பு சுல்தான் வீழ்ச்சிக்கு பின்னர் 1799 ல் கோவை ஆங்கிலேயர் வசமானது. அப்போது பவானி, தாராபுரம் ஆகிய பகுதிகளை ஆங்கிலேயர்கள் தலைநகரமாக ஏற்றனர். பின்னர் ஆங்கிலேயர்கள் நிர்வாக வசதிக்காக 1804 ம் ஆண்டு நவம்பர் 24 ம் தேதியன்று கோவை நகரை தலைநகரமாக கொண்டு கோயம்புத்தூர் மாவட்டத்தை உருவாக்கினர்.
கோயம்புத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட போது வடக்கு எல்லையாக மைசூரும், மற்றொரு புறம் சேலம் மாவட்டத்தின் காவிரி ஆறும், தென் கிழக்கே திருச்சிராப்பள்ளி மாவட்டமும், மேற்கே கொச்சி, மலபார், நீலகிரி மாவட்டத்தையும் எல்லையாக கொண்டிருந்தது. 1868 ம் ஆண்டு கோவை மாவட்டத்தில் முதல் பிரிவினை நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் கோவையில் இருந்து தனியாக பிரிக்கப்பட்டது.

பின்னர் மற்ற வருவாய் வட்டங்கள் நிர்வாக வசதிக்காக பல மாவட்டங்களாக பிரிந்து சென்றன. கடந்த நூற்றாண்டில் கோவைவாசிகளின் வாழ்வாதரமாக பஞ்சாலைகள் விளங்கின. பின்னர் பம்ப், மோட்டார் தொழில்களும், இயந்திர பாகங்களை உற்பத்தி செய்யும் பவுண்டரிகளும் என அதனை சார்ந்து பல்வேறு தொழில்கள் உருவாகின. வெட் கிரைண்டர் கோவையில் தான் முதன் முதலில் உருவாக்கப்பட்டது. வெரைட்டி ஹால் பகுதியில் சாமிக்கண்ணு வின்செண்ட் முதல் திரையரங்கை கட்டி, தமிழ் சினிமாவின் ஆரம்பத்தை துவக்கி வைத்தார். செண்ட்ரல் ஸ்டுடியோ, பட்சி ராஜா ஸ்டுடியோ ஆகியவற்றில் பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள கோவை, நாளுக்கு நாள் அபரிவிதமான வளர்ச்சியை அடைந்து வருகிறது. தொழில் துறையிலும், கல்வி துறையிலும் முன்னணி நகரமாக உருவெடுத்து வருகிறது. பல்வேறு துறைகளிலும் சாதனைகளை புரிந்து வருகிறது. பல்வேறு சிறப்புகளை கொண்ட கோவை இன்று 218 வது பிறந்த நாளை கொண்டாடுகிறது.