ஒரே நாளில் துரைமுருகனின் துபாய் பயணம் இருமுறை ரத்து-நடந்தது என்ன..?

துபாயில் நடைபெற்று வரும் நிறைவு நாள் கண்காட்சியில் கலந்து கொள்ள துபாய் புறப்பட்ட அமைச்சர் துரைமுருகன் விமானத்தில் இருந்து அவரசமாக வெளியேறியதால் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாயில் நடைபெற்ற கண்காட்சியில் கலந்து கொண்டு துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து துபாய் தொழிலதிபர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியவர், தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார்.

இதனையடுத்து தமிழகத்தில் தொழில் தொடங்க லூலூ நிறுவனத்தோடு 3500 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தமும் மேற்கொண்டார். தனது துபாய் பயணத்தை முடித்துக்கொண்டு இன்று அதிகாலை சென்னை திரும்பிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டது.

இதனையடுத்து இரண்டு நாள் அரசு முறை பயணமாக துபாய் செல்ல தமிழக நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டமிட்டிருந்தார். அங்கு தமிழக அரசு சார்பாக நடைபெறவுள்ள கருந்தரங்கில் கலந்துக்கொள்ள திட்டமிட்டிருந்தார்.

இன்று காலை 9.30 மணி விமானத்திற்கு காலை 7.50 மணிக்கே அமைச்சர் துரைமுருகன் சென்னை விமான நிலையம் வந்துள்ளார். பாஸ்போர்ட் மற்றும் விசா சரிபார்க்கப்பட்டது. அப்போது விசாவில் பழைய பாஸ்போர்ட் எண் குறிப்பிடப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதனால் விமானத்தில் துபாய் செல்ல குடியுரிமை அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் துபாய் பயணம் செய்ய முடியாமல் துரை முருகன் வீடு திரும்பினார். இதனையடுத்து இன்று மாலை துபாய் செல்ல டிக்கெட் புக் செய்யப்பட்டிருந்தது.

விசாவில் உள்ளதையெல்லாம் சரிசெய்து மாலை 4 .30 மணியளவில் விமான நிலையத்திற்கு துரை முருகன் வந்திருந்த நிலையில் விமான நிலைய அதிகாரிகளின் சோதனைகளுக்கு பிறகு விமானத்தில் ஏறி அமர்ந்தார்.

பின்னர் விமானத்தில் ஏறி அமர்ந்த அவர், திடிரென தனது பயணத்தை ரத்து செய்து அவசர அவசரமாக விமான நிலையத்தில் இருந்து வெளியேறினார். நெஞ்சு வலி காரணமாக அவர் வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரே நாளில் இரண்டு முறை அமைச்சர் துரைமுருகன் தனது துபாய் பயணத்தை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.