ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்கான முடிவில் எந்த சமரசமும் இல்லை… சீன அதிபர் ஜி ஜின்பிங் பேச்சுக்கு தைவான் பதிலடி..!

சீனாவில் பல ஆண்டுகளாக ஒற்றை கட்சியின் ஆட்சி முறையே நடந்து வருகிறது.

கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், அதிபர் பதவியை ஏற்று ஆட்சி நடத்தி வருவது வழக்கம். அந்த முறையில், ஒருவர் சீன அதிபராக 10 ஆண்டுகாலம் மட்டுமே பதவிவகிக்க முடியும் என்ற விதியிருந்தது. சர்வாதிகாரத்தை தவிர்க்க இருந்த இந்த விதியினை தற்போதைய அதிபர் ஜி ஜின்பிங் 2018ஆம் ஆண்டே நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது.

2012ஆம் ஆண்டு அதிபராக பதவியேற்ற ஜி ஜின்பிங்கின் ஆட்சிக்காலம் இந்தாண்டோடு நிறைவடைய இருக்கிறது. இந்த சூழலில்தான், 20ஆவது கம்யூனிஸ்ட் மாநாடு இன்று தொடங்கியுள்ளது. ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த மாநாட்டில், அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஜி ஜின்பிங் தான் அதிபராக தொடர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மாநாட்டில் சுமார் 2 மணிநேரங்களுக்கு பேசிய சீன அதிபர் ஜி ஜின்பிங், ஹாங்காங் பிரச்சனை, தைவான் விவகாரம், கரோனா தொற்று ஆகியவை குறித்து விரிவாக உரையாற்றினார்.

ஹாங்காங்கில் நிலவிய அரசியல் குழப்பத்தை நீக்கி, அதை சீனா முழுமையாக கைப்பற்றிவிட்டதாக அதிபர் ஜி ஜின்பிங் அறிவித்தார். தொடர்ந்து, தைவான் விவகாரம் குறித்து பேசிய அவர்,”சீனா எப்போதும் தைவான் மக்கள் மீது மரியாதையுடனும், அக்கறையுடனும் இருந்து பல நன்மைகளை செய்துள்ளது” என்றார்.

மேலும்,”தைவானில் நிலவும் பிரச்சனையை தீர்ப்பது சீனாவின் கடமைகளுள் ஒன்று. அதுகுறித்த முடிவு சீன மக்களின் கைகளில்தான் உள்ளது. அமைதியை நிலைவாட்டுவதற்கு சீனா பல்வேறு முயற்சிகளை நேர்மையுடன் மேற்கொள்ளும் என்பதை நாங்கள் உறுதியளிக்கிறோம். மேலும், இந்த நடவடிக்கையில் எங்களின் படையை பயன்படுத்த தயங்கவே மாட்டோம். அதுசார்ந்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்போம். தைவானில் அந்நிய சக்திகளின் தலையீடு இருப்பதனாலேயே, படையே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. தைவான் மக்கள்தொகையில், அதன் விடுதலையை கோருபவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவுதான்.

தேச மறு ஒருங்கிணைப்பு மற்றும் தேசிய புத்துணர்ச்சியின் மூலம் வரலாற்றுச் சக்கரங்கள் முன்னோக்கிச் செல்கின்றன. மேலும் நமது தாய்நாடு தனது முழுமையான மறு ஒருங்கிணைப்பை அடைய வேண்டும், அது அடையப்பட வேண்டும்!” என்றபோது கரகோஷம் விண்ணை முட்டியது.

ஜி ஜின்பிங்கின் இந்த பேச்சுக்கு தைவான் உடனடியாக பதிலடி கொடுத்துள்ளது. தைவான் அதிபர் மாளிகையில் இருந்து இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,”சீன குடியரசு (Repuclic of China) என்பது இறையாண்மை மற்றும் சுதந்திரமான நாடு. தைவான் தனது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளது. தேசிய இறையாண்மையை பொறுத்தவரையில் நாங்கள் பின்வாங்கப் போவதில்லை. ஜனநாயகம் மற்றும் சுதந்திரத்திற்கான முடிவில் எந்த சமரசமும் இல்லை. போர் புரிய வேண்டும் என்பது எங்களின் விருப்பமல்ல. இதுதான் தைவான் மக்களின் ஒருமித்த கருத்து” என குறிப்பிட்டுள்ளது.

கடந்த திங்கட்கிழமை சுதந்திர தின விழாவில் பேசிய தைவான் அதிபர் சாய் இங்-வென்,”சீன – தைவானுக்கு இடையேயான போர் என்பது விருப்பத்தில் வந்தது இல்லை” என பேசியிருந்தார். தொடர்ந்து, சீனாவுடனான பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைப்பு அளிப்போம் என தெரிவித்துள்ள அவர், மறுப்புறம் தைவான் படைகளையும் வலுவாக்கி வருவது குறிப்பிடத்தக்கது.