மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் (Geopolitical) பதற்றங்கள், இந்தியாவின் மருத்துவ சாதனத் துறையை கடுமையாக பாதித்துள்ளன.
இந்த போரால் இந்தியாவில் பாராசிட்டமால், அமோக்ஸிசிலின், மெட்ஃபோர்மின் மற்றும் அசித்ரோமைசின் போன்ற அத்தியாவசிய மருந்துகளுக்கு விரைவில் தட்டுப்பாடு ஏற்படும் என்றும், மருந்துகளின் விலை கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் நாட்டின் மிகப்பெரிய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கங்களில் ஒன்று எச்சரித்துள்ளது.மருந்து உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களின் விலை அதிரடியாக உயர்வு மற்றும் விநியோக சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளே இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது.
இந்தியாவில் உள்ள இமாச்சல பிரதேசத்தில் 500-க்கும் மேற்பட்ட மருந்து உற்பத்தி அலகுகள் செயல்படுகின்றன. இந்நிலையில் கடந்த 15 நாட்களில் மட்டும் மருந்து உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் வேதிப்பொருட்களின் விலை 200% முதல் 300% வரை அதிகரித்துள்ளதாக இமாசல பிரதேச மருந்து உற்பத்தியாளர்கள் சங்க(HDMA) மாநில தலைவர் ராஜேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.இந்தியாவில் பெரும்பாலான மக்கள் அதிகமாக பயன்படுத்தும் காய்ச்சல் மருந்தான பாராசிட்டமால் தயாரிக்க பயன்படும் மூலப்பொருளின் விலை கிலோவுக்கு ரூ.250லிருந்து ரூ.450 ஆக உயர்ந்துள்ளது.
இதேபோல் நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் சுவாச பிரச்சனைகளுக்காக மக்கள் தினசரி பயன்படுத்தும் ஜெனரிக் மருந்துகளின் விலை கணிசமாக உயரக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.கூடுதலாக, மருந்துகளின் அட்டைப் பெட்டிகள், லேபிள்கள் மற்றும் வெளிப்புற பேக்கேஜிங்கிற்கு பரவலாகப் பயன்படுத்தப்படும் சில காகிதம் சார்ந்த பேக்கேஜிங் உள்ளீடுகளின் விலைகளிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்புகள் உள்ளன. பல பிரிவுகளில் பரவலாக ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வு, மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மீது மேலும் நிதிச் சுமையை ஏற்படுத்துகிறது.மூலப்பொருட்கள், கரைப்பான்கள் மற்றம் பேக்கேஜிங் பொருட்களின் விலை உயர்வு இதே நிலை நீடித்தால், மருந்து உற்பத்தியை தொடருவது கடினம் எனவும் மருந்து உற்பத்தி வட்டாரங்களில் கூறப்படுகிறது.மேலும் வைட்டமின்கள், ஹார்மோன்கள், பாராசிட்டமால், சிரிஞ்சுகள் மற்றும் மருத்துவக் கையுறைகளில் பற்றாக்குறை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் எல்பிஜி சிலிண்டர்களின் தட்டுப்பாடும் இந்த நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளதாக அவர் தெரிவிந்தார்.
குஜராத், மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானாவில் உள்ள முக்கிய மருந்து உற்பத்தி மையங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கொதிகலனைச் சார்ந்த முக்கிய செயல்பாடுகள் மற்றும் கிருமி நீக்கம் ஆகியவற்றுக்கு எரிபொருள் இல்லாததால், சுமார் 200 அலகுகள் சில நாட்களில் மூடப்படும் அபாயத்தில் உள்ளன.மருந்துவ துறையில் ஏற்பட்டுள்ள இந்த அசாதாரண நெருக்கடியை தவிர்க்கவும், சுகாதார துறை முடங்காமல் பாதுகாக்கவும் மத்திய சுகாதார அமைச்சகம் உடனடியாக தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று இமாச்சல பிரதேச மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.








