இன்னும் 2 நாட்கள் தான் இருக்கு… அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்.!!

பாராளுமன்ற தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தல் இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய தேர்தலாகவே பார்க்கப்படுகிறது.

இத்தேர்தலில் காங்கிரஸ், 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி.க., ம.தி.மு.க., போன்ற கட்சிகளோடு கூட்டணி அமைத்து தி.மு.க. போட்டியிடுகிறது. இக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் தொகுதி, தொகுதியாக சென்று தமது கட்சி வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். குறிப்பாக தனது பிரச்சாரத்தில் அவர் பாரதீய ஜனதா கட்சியையே கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.

இதே போல தே.மு.தி.க., எஸ்.டி.பி.ஐ. போன்ற கட்சிகளோடு கூட்டணி அமைத்து அ.தி.மு.க. இந்த தேர்தலை சந்திக்கிறது. இக்கட்சியின் பொது செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அ.தி.மு.க. வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார். இவரை பொறுத்தவரை தி.மு.க.வையே அதிகம் விமர்சனம் செய்து வருகிறார்.

ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், திறந்த வேனில் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். அப்போது தனது சின்னமான பலாப்பழத்தை காட்டி அவர் வாக்கு சேகரித்து வருகிறார். நான் வெற்றி பெற்றால் ராம்கி ஆலையை மூடுவேன் என்பது போன்ற வாக்குறுதிகளை அவர் அளித்து வருகிறார். நேற்றும் அவர் கொளுத்தும் வெயிலில் பிரச்சாரம் செய்தார்.

கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, கோவையில் மட்டுமின்றி கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கும் ஆதரவு திரட்டி வருகிறார். நேற்று அவர் சூலூர் பகுதியில் திறந்த வேனில் வாக்கு சேகரித்தார்.

இந்த தேர்தலில் 40 தொகுதிகளிலும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. நேற்று நாமக்கல்லில் சீமான் பிரச்சாரம் செய்து வாக்கு சேகரித்தார். அப்போது ஒரு தொண்டர், ஐ லவ் யூ என்று கூறினார். உடனே சீமான் மீ டூ என்றார். இதுவரை ஒன் சைடு லவ்வாக இருந்தது. இப்போது நீங்களும் நேசிக்க தொடங்கி விட்டீர்கள் என்று நெகிழ்ச்சியோடு கூறினார்.

இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் விதவிதமான உத்திகளை கையாண்டு வாக்கு சேகரித்து வருகிறார்கள். சிலர் தோசை சுட்டுக் கொடுத்தும், சிலர் புரோட்டோ போட்டு கொடுத்தும், சிலர் டீ போட்டுக் கொடுத்தும், சிலர் இளநீர் வெட்டி கொடுத்தும், இப்படி தங்களுக்கு தெரிந்த வித்தைகளை எல்லாம் கையாண்டு வாக்காளர்களை கவர்ந்து வருகிறார்கள்.