பிரதமரும், முதல்வரும் ஸ்நேகத்தை பரிமாறிக்கொண்ட அற்புத நிகழ்வு … இறுக்கம் போய் மகிழ்ச்சியால் நிரம்பி வழிந்தது ஒலிம்பியாட் துவக்க விழா..!!

சென்னை: “கடந்த முறை பிரதமர் சென்னை வந்ததற்கும், இந்த முறை பிரதமர் சென்னை வந்ததற்கும் ஏகப்பட்ட வித்தியாசங்களை காண முடிந்தது.

இது தமிழக மக்களுக்கு, இனிய உணர்வை ஏற்படுத்தி வருகிறது.

பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைக்க அன்றைய தினம், பிரதமர் வருகையையொட்டி, நேரு விளையாட்டரங்கில் ஆயிரக்கணக்கான பாஜக தொண்டர்கள் குவிந்திருந்தனர்.

இசைக் கலைஞர்கள், நடனக் கலைஞர்களில் பெரும்பாலோர் காவி உடை அணிந்திருந்தனர். அதேபோல, அங்கு வந்திருந்த சிறுவர்களும் காவி துண்டு, வெள்ளை வேட்டி, கழுத்தில் ருத்ராட்சம் என்று காவிமயமாக காட்சியளித்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக, சிவலிங்கம், பசு மாடு போன்ற ஓவியங்களும் இணைந்து காவிமயமாக காட்சி அளித்தது.

ஆனால், விழா மேடையிலோ, முழுக்க முழுக்க திராவிட நெடி வீசியது.. காரணம், பிரதமரை மேடையில் வைத்து கொண்டே முதல்வர் ஸ்டாலின் பேசிய பேச்சுக்கள்தான், பாஜகவை உச்சக்கட்டத்துக்கு சூடாக்கிவிட்டன.. பிரதமர் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் வழக்கமாக நிகழும் பாராட்டுரை என்பதை தாண்டி, வரி பகிர்வு, நிதி பங்களிப்பு உள்ளிட்ட விசயங்களில் ஒன்றிய அரசால் தமிழகம் வஞ்சிக்கப்படுவதை முதல்வர் ஸ்டாலின், மேடையில் சுட்டிக்காட்டினார்.

அதிலும் பெரிதாக பேசப்பட்டது திராவிட மாடல் என்ற வாசகம்தான்.. முதல்வர் பேசும்போது, “இந்தியாவின் பிற மாநிலங்களை விட தமிழ்நாட்டின் வளர்ச்சி தனித்துவம் மிக்கது அந்த வளர்ச்சி வெறும் பொருளாதாரம் சார்ந்தது மட்டுமல்ல சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம், சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி. அதுதான் திராவிட மாடல் வளர்ச்சி” என்றார் முதல்வர்.

இதைக் கேட்டதுமே களம் கொதித்தது.. அதிருப்திகள் வெடித்தன.. விமர்சனங்கள் குவிந்தன.. அரசியல் களமே அன்று வேறுமாதிரியான இருந்த சூழலில், முதல்வரின் பேச்சுக்களை பாஜக விமர்சித்தது.. “ஸ்டாலின் போட்டி அரசியல் செய்ய முயற்சிப்பதாகவும், பிரதமர் மோடி முன்னால் திமுக அரசியல் நாடகத்தை அரங்கேற்றி இருப்பதாகவும் பாஜக விமர்சித்தது. கச்சத்தீவை தாரை வார்த்ததே கருணாநிதி தான் என்றும் அதனை மீட்க வேண்டும் என தமிழகத்தில் யார் பேசினாலும் பேசலாம், ஆனால், ஸ்டாலின் அதைப்பற்றி பேசவே தகுதியில்லை என்று கொந்தளித்தார் அண்ணாமலை.

எனினும் மனதில் உள்ளதை ஸ்டாலின் பேசியிருக்கிறார்.. வெளிப்படை பேச்சு என்றுமே தவறில்லை.. இருப்பதை தானே ஸ்டாலின் பேசினார் என்று எஸ்பிடிஐ உள்ளிட்ட பலரும் அந்த பேச்சை அப்போது வரவேற்றனர்.”மாநில சுயாட்சிக் குறித்தும், மாநிலத்திற்கு எது தேவை, எது தேவையில்லை என்பது குறித்தும், இந்தியாவிலேயே பிரதமரை மேடையில் வைத்துக் கொண்டே பேசிய ஒரே முதல்வர் ஸ்டாலின் மட்டுமே” என்று உதயநிதி பெருமையாக கூறி, பாஜகவை லேசாக சீண்டினார்.

இப்படி எத்தனையோ விதமான சர்ச்சைகள், அதிருப்திகளுடன் அந்த நிகழ்வு நடந்து முடிந்தாலும், இன்றைய தினம் அரசியல் கிளைமேட் அடியோடு மாறி காணப்படுகிறது.. திமுக – பாஜக தலைவர்கள் சினேகத்துடன், ஒருவருக்கொருவர் வணக்கம் சொல்லி, இனிமையாக பேசுவதை மேடையில் பார்க்க முடிகிறது.. அதிலும் இதில் ஹைலைட்டே, பிரதமரும், முதல்வரும் பேசிக் கொண்ட தருணங்கள்தான்.

இருவருமே ஒரே மாதிரியான பட்டு சட்டை வேட்டியில் தகதகவென மேடையில் ஜொலித்தார்கள். பிரதமர், ஸ்டாலின் 2 பேருமே அருகருகே உட்கார்ந்து சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, முதல்வர் ஏதோ சொல்ல, அதனை கேட்ட பிரதமர் செல்லமாக விரலை நீட்ட, அவரது கையை பிடித்தபடி சிரித்தார் ஸ்டாலின்.பிறகு, சிறிது நேரம் முதல்வரின் தோளில் தட்டிகொடுத்து சிரித்தபடி பேசிக் கொண்டிருந்தனர்.. நடுநடுவே, ஒளிபரப்பாகி கொண்டிருந்த கலை நிகழ்ச்சிகள் தொடர்பாக பிரதமரிடம் முதல்வர் விளக்க சொன்னதை காண முடிந்தது.

எவ்வளவுதான், பொதுவாழ்க்கையில், போட்டி பொறாமைகள் இருந்தாலும், அனைத்தையும் மிஞ்சி வெளிப்பட்டு விடுகிறது அரசியல் நாகரீகம்.. கடந்த முறை பிரதமர் சென்னை வந்திருந்தபோது மேடையில் ஒரு இறுக்கமான சூழல் நிலவியதையும் இந்த தமிழகம் கண்டது. ஆனால், இன்றைய தினம் அப்படிப்பட்ட தர்மசங்கடங்களும், வருத்தங்களும் இல்லாத நிலையில், பிரதமரும், முதல்வர் ஸ்டாலினும் மகிழ்ச்சியை பறிமாறிக்கொண்டது, திமுக மற்றும் பாஜகவினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த முறை காணப்பட்ட இறுக்கங்களும் நொறுங்கி அதே மேடையில் கழண்டு விழுந்தது..!