சென்னை: நேற்று செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி காரில் நேராக ஆளுநர் மாளிகை சென்றடைந்தார்.
அங்கு பிரதமர் மோடி பாஜக நிர்வாகிகளுடன் நீண்ட நேரம் ஆலோசனை செய்தார்.
செஸ் ஒலிம்பியாட் தொடரின் தொடக்க விழா நேற்று சென்னையில் நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய நிகழ்ச்சிகள் ஆகியவை இன்று விழாவில் அரங்கேற்றப்பட்டன. முதல்வர் ஸ்டாலின், பிரதமர் மோடி இருவரும் இணைந்து செஸ் ஒலிம்பியாட் தொடருக்கான தீபத்தை செஸ் வீரர் விசுவநாதன் ஆனந்திடம் வழங்கினர்.
பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர். என் ரவி ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் துவக்க விழாவை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி காரில் நேராக ஆளுநர் மாளிகை சென்றடைந்தார். கிண்டி ஆளுநர் மாளிகையில் 30 நிமிடம் அவர் ஓய்வு எடுத்தார். அவரை தொடர்ந்து தமிழ்நாடு பாஜக நிர்வாகிகள் அங்கே சென்றனர். பிரதமரின் ஓய்விற்கு பின், அங்கு வந்த பாஜக நிர்வாகிகளை அவர் சந்தித்து பேசினார். பாஜக மூத்த தலைவர்கள் பலர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
கட்சியில் புதிதாக சேர்ந்த இரண்டாம் கட்ட தலைவர்களும் கூட இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். சுமார் 40 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றது. தமிழ்நாட்டிற்கு கடந்த முறை மோடி வந்த போதும் கூட பல்வேறு ஆலோசனைகளை செய்தார். அதேபோல் நேற்றும் அவர் பாஜக தலைவர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். எச். ராஜா, எல் முருகன், நயினார் நாகேந்திரன், பொன் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பு நீண்ட நேரம் நடத்த நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி பற்றி இதில் பேசப்பட்டதாக தெரிகிறது. அதோடு பிரதமர் மோடி படம் விளம்பரங்களில் இடம்பெறாதது குறித்தும் இதில் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இது போக தமிழ்நாடு பாஜகவின் புதிய நிர்வாகிகள், அதிமுகவில் ஏற்பட்ட மாற்றங்கள், தமிழ்நாடு அரசியல் நிலவரங்கள் உள்ளிட்ட பொதுவான விஷயங்களையும் பிரதமர் மோடி பாஜக நிர்வாகிகளுடன் நடந்த இந்த சந்திப்பில் பேசியதாக தெரிகிறது.
இந்த நிலையில் இந்த சந்திப்பில் என்ன பேசப்பட்டது என்று அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் நேற்று இரவு விளக்கினார். அவர் அளித்த பேட்டியில், நான் அரசியல் பேச விரும்பவில்லை. முதல்வர் அவர்கள் முதல்வராக நடந்து கொண்டார். செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவை மிகவும் அற்புதமாக நடத்திய தமிழ்நாடு அரசுக்கு பாஜக சார்பில் நன்றி. தமிழகத்தின் பாரம்பரியத்தை உலகளவில் தமிழ்நாடு அரசு எடுத்துச் சென்றுள்ளது. செஸ் போட்டியை எல்லா இடங்களுக்கும் எடுத்து சென்ற தமிழ்நாடு அரசுக்கு நன்றி.
மிக அற்புதமாக இந்த நிகழ்வை நடத்தி இருக்கிறார்கள். சென்னை மாநகரம் முழுவதும் உற்சாகமான வரவேற்பு கிடைத்துள்ளது. ராஜ்பவனில் நாங்கள் எதுவும் பேசவில்லை. பிரதமரை இங்கே வழியனுப்ப வந்தோம். பிரதமரை சந்திக்க வந்தோம். அவரிடம் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் ஆசி பெற ஆசைப்பட்டனர். அதனால் அவரை அழைத்து வந்தோம்.
பிரதமரை தனியாக சந்திக்க பாஜக நிர்வாகிகளுக்கு இப்போது மட்டுமே நேரம் கிடைத்தது. பிரதமரிடம் அரசியல் பேசவில்லை. ஆசி வாங்க வந்தோம். நாளை (இன்று) பிரதமர் அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்கிறார். அங்கும் அவரை பார்க்க முடியாது என்பதால் இப்பவே அவரை பார்த்தோம். இதில் அரசியல் எதுவும் பேசவில்லை. பிரதமரிடம் மனம் விட்டு பேசினோம். குடும்ப விஷயங்கள் பற்றி பேசினோம், மற்றபடி எதுவும் பேசவில்லை.
புதிதாக திருமணம் ஆன பாஜக நிர்வாகிகள், பழைய பாஜக நிர்வாகிகள் பற்றி மோடி விசாரித்தார். பிரதமருக்கு தெரியாத அரசியல் இல்லை. அவர் நேற்று உற்சாகமாக இருந்தார். இதனால் அரசியல் பேச எதுவும் இல்லை. அவர் நேற்று நடந்த நிகழ்வு பற்றி பேசினார். தேர்தல் நேரம் இல்லை இது. அதனால் அவர் அரசியல் பேசவில்லை. நேரம் வரும் போது அரசியல் பேசுவோம்.நேற்று அவர் பேசவில்லை, என்று பிரதமர் மோடியுடனான சந்திப்பு பற்றி அண்ணாமலை தெரிவித்தார்.
Leave a Reply