பரபரப்பு ஏற்படுத்திய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மே 13-ந்தேதி தீர்ப்பு.

கோவை ஏப் 29 கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019 -ம் ஆண்டு கல்லூரி மாணவிகள், இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய கொடூர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இது குறித்து பாதிக்கப்பட்ட இளம்பெண் பொள்ளாச்சி டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்தது. இந்த வழக்கில் பொள்ளாச்சி சேர்ந்த சபரி ராஜன் ( வயது 25) திருநாவுக்கரசு ( வயது 25) வசந்தகுமார் (வயது 27 )சதீஷ் (வயது 28) மணிவண்ணன் ஹே ரேன் பால் (வயது 29) பாபு என்ற பைக் பாபு ( வயது 34) அருளானந்தம் ( வயது 34) அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். கைதான 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் 9 பேர் மீது பாலியல் வன்கொடுமை, அத்துமீறல், ஆள் கடத்தல் ,அடைத்து வைத்து துன்புறுத்தல், கூட்டு சதி, தடையங்கள் அழிப்பு, ஆபாச வீடியோ எடுத்தல், ஆபாச வீடியோக்கள் பகிர்தல் உட்பட 13 பிரிவின்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டது. முதலில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது. அதன் பின்னர் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணை கோவை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் திருநாவுக்கரசு பயன்படுத்திய உயர்ரக செல்போன், சபரிராஜனின் லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது .அதில் டிஎன் 41″ அட்டாக் பாய்ஸ்” என்ற பெயரில் வாட்ஸ் அப் குரூப் ஆரம்பித்தது தெரிய வந்தது. அதில் நிறைய ஆபாச வீடியோக்கள் இருந்தன. இதுதான் இந்த வழக்கின் முக்கிய ஆதரமாக சேர்க்கப்பட்டது. 6 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கில் கைதான 9 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் 48 சாட்சிகள் விசாரிக்கப்பட்டன. 215 ஆவணங்கள் செல்போன், பென்டிரைவ், சி டி உட்பட மின்னணு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அனைத்து பொருட்களும் விசாரணைக்கு சேர்க்கப்பட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் இந்த வழக்கின் விசாரணை விரிவாக நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் சி.பி.ஐ. கோர்ட் சிறப்பு வழக்கறிஞர் சுரேந்திர மோகன் ஆஜர் ஆனார்.இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட 8 பெண்கள் விசாரணயின் போது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சாட்சியம் அளித்தனர். இவ்வழக்கில் கைதான் 9 பேரும் சேலம் சிறையில் இருந்தபடியே காணொளி காட்சி மூலம் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் கடந்த 5-ந் தேதி கைதான 9 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சேலத்திலிருந்து கோவைக்கு கொண்டுவரப்பட்டு நீதிபதி நந்தினி தேவி முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது ஒவ்வொருவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. இது வீடியோவாக பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து குறுக்கு விசாரணை நடந்து வந்தது. இதில் கைதான 9 பேரின் தரப்பில் 7 மூத்த வக்கீல்கள் ஆஜராகி வாதாடினார்கள். இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று நீதிபதி நந்தினி தேவி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் சரி பார்ப்பு, சாட்சி விசாரணை, குறுக்கு விசாரணை என அனைத்து விசாரணைகளும் முடிவு பெற்றதால் இந்த வழக்கில் மே மாதம் 13-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதிஅறிவித்தார். அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். தமிழகத்தை உலுக்கிய இந்த வழக்கில் என்ன தீர்ப்பு வழங்கப்படும் என்று பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.