சென்னை: அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து செங்கோட்டையனை எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் நீக்கி உத்தரவிட்டார்.
இந்நிலையில், கட்சியிலிருந்து நீக்கம் தொடர்பாக, இன்று விளக்கம் தர போவதாக செங்கோட்டையன் தெரிவித்த நிலையில், அதன்படியே செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அதிமுக முதல் பொதுக்குழுவை நடத்தியவன் நான், அதிமுக பிளவுபடக்கூடாது என்பதற்காக 2 முறை எனக்கு வந்த பொறுப்பை விட்டுக்கொடுத்தேன் என்றெல்லாம் பல்வேறு விஷயங்களை செங்கோட்டையன் பேசியிருக்கிறார்.
மூத்த தலைவரும், அதிமுகவின் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்று கோரினார்.. ஒருங்கிணைந்த அதிமுகவுக்காக முதலில் ஒரு கெடு விதித்த நிலையில், குறைந்தபட்சம் அந்த கெடு தேதிக்குள், ஒருங்கிணைப்பு பணிகளையாவது துவங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஆனால், அதற்கு பதிலாக அவரது பதவியை பறித்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இதனால், அவரது கட்சியின் பதவிகள் அனைத்தும் பறிக்கப்பட்டு, அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் மட்டும் தொடர்ந்தார்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் நடைபெற்ற முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருடன் சேர்ந்து மரியாதை செலுத்தினார்.. செங்கோட்டையன். தொடர்ந்து கூட்டாக செய்தியாளர் சந்திப்பும் நடத்தினார்கள்.
பிறகு செங்கோட்டையன், ஓபிஎஸ் இருவரும் சேர்ந்து சசிகலாவை சந்தித்தனர்.. ஒரே வாகனத்திலும் ஓபிஎஸ் செங்கோட்டையன் சென்றது அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.
இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம், செங்கோட்டையன் நீக்கப்படுவாரா நீக்குவதற்கு தயக்கமா? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, எந்தத் தயக்கமும் இல்லை. முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றே கூறியிருந்தார்.
எனவே, எம்எல்ஏ பதவியை அவரிடமிருந்து பறிக்க முடியாவிட்டாலும், அடிப்படை உறுப்பினர் பதவியை எடப்பாடியால் பறித்துவிட முடியும் என்று அரசியல் நிபுணர்களும் கருத்து கூறியிருந்தனர்.
இந்நிலையில், எதிர்பார்த்தது போலவே, செங்கோட்டையனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் அறிவித்துவிட்டார்.
இதனால் அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்ட நிலையில், ஓபிஎஸ், தினகரன், சசிகலாவுடன் சேர்ந்து நான்கு பேரும் அடுத்து என்ன செய்ய போகிறார்கள் ? எப்படி தேர்தலை எதிர்கொள்வார்கள்? கூட்டணி நிலைப்பாடு என்ன? என்பது குறித்த விவாதங்கள் இணையத்தில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
ஒருவேளை விஜய் தலைமையிலான கூட்டணியில் இவர்களுக்கு இடம் கிடைக்கலாம் என்கிறார்கள்.. டிடிவி தினகரனும் இதற்கு தயாராகவே உள்ளதால், புதிய அணி உருவாகக்கூடுமோ? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
அதேபோல, செங்கோட்டையன், ஓபிஎஸ், தினகரன் இவர்கள் நால்வரும் இணைந்து, அதிமுகவிலிருந்து ஏற்கனவே கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் ஒன்றிணைய வேண்டும் என்ற பிரச்சாரத்தை மேற்கொள்ளவும் வாய்ப்புள்ளதாக சொல்கிறார்கள். ஆனால், இந்த 3, 4 வருடங்களாக சசிகலா, ஓபிஎஸ், தினகரனாலேயே முடியாதது, செங்கோட்டையனால் முடியுமா? என்றும் சிலர் கேள்வி எழுப்பியபடி உள்ளனர்.
இதனிடையே, கட்சியிலிருந்து நீக்கம் குறித்து செங்கோட்டையனிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “நாளை காலை 11 மணிக்கு கட்சி அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் அனைத்திற்கும் விளக்கம் தருகிறேன்” என்று கூறியிருந்தார்.
எனவே செய்தியாளர்களிடம் என்ன பேசப்போகிறார்? எடப்பாடி பழனிசாமியின் பதவி நீக்கம் குறித்த சொல்ல போகிறார்? என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
ஒருவேளை தன்னை கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு கிடையாது, கட்சியில் அமைப்பு செயலாளரான தன்னை பொதுக்குழுதான் நீக்க முடியுமே தவிர, எடப்பாடி பழனிசாமியோ, அல்லது சிறு குழுவோ நீக்க முடியாது என்று செங்கோட்டையன் சொல்ல வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறினார்கள்
இந்நிலையில், செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.. அப்போது “அதிமுக முதல் பொதுக்குழுவை நடத்தியவன் நான்.. முதல் பொதுக் குழு கூட்டத்தை நான் சிறப்பாக நடத்தியதற்காக எம்ஜிஆரிடம் பாராட்டும் பெற்றேன்.. அதிமுகவுக்கு விசுவாசமுள்ள தொண்டன் என்று என்னை ஜெயலலிதா அழைத்தார். தடம் புரளாமல் சலனத்திற்கும் இடமில்லாமல் பணியாற்றினேன்..
விசுவாசமாக இருந்ததால்தான், எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் பல பொறுப்புகளை எனக்கு தந்தார்கள். இந்த இயக்கத்துக்காக பாடுபட்ட என்னை நீக்கியிருப்பது வருத்தத்தை தருகிறது.. அதிமுக பிளவுபடக்கூடாது என்பதற்காக 2 முறை எனக்கு வந்த பொறுப்பை விட்டுக்கொடுத்தேன்..
திமுகபின் B டீம் யார்? கொடநாடு கொலை வழக்கில் A1 ஆக எடப்பாடி பழனிசாமி உள்ளார். நான் B டீமில் இல்லை, எடப்பாடிதான் A1 ஆக இருக்கிறார்” என்றெல்லாம் பல்வேறு விஷயங்களை செங்கோட்டையன் பேசியிருக்கிறார்.








