காங்கிரசில் அடுத்த பூகம்பம்… கார்கேவுக்கு போன் போட்ட டிகே சிவக்குமார்… துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக மிரட்டல்? கர்நாடகாவில் பரபரப்பு..!

பெங்களூர்: கர்நாடகாவில் சித்தராமையா தான் 5 ஆண்டு முதல்வராக இருப்பார் என அமைச்சர் எம்பி பாட்டீல் பேசியது பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தான் கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார், மல்லிகார்ஜூன கார்கேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆட்சியில் இருந்து விலகி இருக்கும் சூழல் ஏற்படும் என மிரட்டிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடகாவில் மொத்தம் 224 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கடந்த 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு 13ம் தேதி ஓட்டு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வென்று அசத்தியது. பாஜக 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ஜேடிஎஸ் 19 இடங்களிலும் மற்றவர்கள் 4 தொகுதிகளிலும் மட்டுமே வெற்றி பெற்றனர்.

கர்நாடகாவில் ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்ற நிலையில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளை கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து முதல்வர் பதவிக்கான ரேஸ் தொடங்கியது. இதில் 2 பேர் இடையே கடும் போட்டி நிலவியது.

முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் கர்நாடகா மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் ஆகியோர் முதல்வர் பதவியை பெற டெல்லி சென்று மேலிட தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டிகே சிவக்குமாரும் தேர்வாகினர். இவர்கள் 2 பேரும் கடந்த 20ம் தேதி பதவியேற்றனர். இவர்களுடன் 8 பேர் அமைச்சர்களாகினர்.

இந்நிலையில் தான் கர்நாடகா முதல்வர் பதவியில் முதல் இரண்டரை ஆண்டுகள் சித்தராமையாவும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் டிகே சிவக்குமாரும் தொடர்வார்கள் என சொல்லப்படுகிறது. இதுபற்றி காங்கிரஸ் மேலிடம் சார்பில் எதுவும் கூறப்படவில்லை. இதற்கிடையே தான் சித்தராமையாவின் ஆதரவாளரும், அமைச்சருமான எம்பி பாட்டீல், ”சித்தராமையா தான் 5 ஆண்டுகள் முதல்வராக இருப்பார். முதல் இரண்டரை ஆண்டு ஒருவர், அடுத்த இரண்டரை ஆண்டு ஒருவர் முதல்வராக இருப்பார் என எந்த ஒப்பந்தமும் இல்லை. ஒருவேளை அப்படி ஏதேனும் இருந்தால் அதுபற்றி காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால் தெரிவிப்பார்” என்றார்.

இது காங்கிரஸ் கட்சியில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது. மேலும் விவாதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக அமைச்சர் எம்பி பாட்டீலில் இந்த பேச்சால் டிகே சிவக்குமார் மற்றும் அவரது தரப்பினர் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். குறிப்பாக டிகே சிவக்குமார் கோபத்தின் உச்சிக்கு சென்றுவிட்டார். உடனடியாக அவர் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கேசி வேணுகோபால், கர்நாடகா மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்டோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது டிகே சிவக்குமார் கோபத்தை கொப்பளித்துள்ளார்.

அதாவது, ”சித்தராமையா தான் 5 ஆண்டு முதல்வர் என்று கூற எம்பி பாட்டீல் யாரு? அவர் என்ன மேலிட தலைவரா? இல்லை காங்கிரஸ் தலைவரா? எந்த ஆதாரத்தின் அடிப்படையில் எம்பி பாட்டீல் அப்படி கூறியுள்ளார்” என கேள்விகள் எழுப்பி காட்டமாக விமர்சித்துள்ளார். மேலும், ”இனியும் இதுபோன்று அவர் பொதுவெளியில் கூறினால் மோசமான நிலை ஏற்படும். எப்படி அவர் இந்த கருத்தை கூறலாம்.

நான் எனது முடிவில் தெளிவாக இருக்கிறேன். தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு தான் முன்னுரிமை கொடுக்கிறேன். இதுபோன்ற பேச்சுக்கள் தொடர்ந்தால் நான் அரசில் இருந்து விலகி இருக்க தயார். இதுபோன்ற பேச்சுகளுக்கு தடை விதிக்க வேண்டும். இல்லாவிட்டால் நான் காங்கிரஸ் அரசில் இருந்து விலகி இருக்கவும் தயாராக இருக்கிறேன்” என ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டிகே சிவக்குமார் ஆட்சியில் இருந்து விலகி கொள்வதாக தெரிவித்து இருப்பதன் மூலம் அவர் தனது துணை முதல்வர் பதவியையும் கூட ராஜினாமா செய்ய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் கர்நாடகா காங்கிரஸ் கட்சியில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. மேலும் ராஜஸ்தானில் முதல்வர் பதவிக்காக அசோக் கெலாட், சச்சின் பைலட் இடையே மோதல் தொடர்ந்து வரும் நிலையில் அதேபோன்ற சூழல் கர்நாடகாவிலும் உருவாகிவிடுமோ என காங்கிரஸ் கட்சியினர் அச்சமடைந்துள்ளனர்.