குழந்தையின் கை இழந்த விவகாரம்… அதிர்ச்சி தரும் விசாரணைக்குழு அறிக்கை வெளியீடு.!

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவின் அறிக்கையை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் ஒன்றரை வயது குழந்தைக்கு கை அகற்றப்பட்டதாக அந்தக் குழந்தையின் தாய் அஜிஷா குற்றம்சாட்டியிருந்தார். இதனையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க விசாரணைக்குழு அமைத்து சுகாதாரத்துறை உத்தரவிட்டது.

இந்த நிலையில், விசாரணைக்குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளது. அதில், ” குழந்தையின் உயிரைக் காக்கவே கைகள் அகற்றப்பட்டுள்ளது. சூடோமோனாஸ் என்ற கிருமியால் ஏற்படும் மூளைத்தொற்று ரத்த நாளத்தை பாதித்ததால் வலது கையில் ரத்தஓட்டம் பாதிக்கப்பட்டது.

குழந்தைக்கு ரத்தநாள அடைப்பு மருந்தினாலோ, மற்ற சிகிச்சை முறைகளாலோ ஏற்படவில்லை. வென்ஷன் (vention) ஊசியை தமனியில் போடவில்லை என்பது பெற்றோர் மருத்துவர்களின் வாக்குமூலத்தில் உறுதியானது. குழந்தை அனுமதிக்கப்பட்ட உடனேயே காலதாமதமின்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

குழந்தையின் உயிரை காக்கவே கை அகற்றப்பட்டது. ரத்த ஓட்டம் பாதித்ததால் குழந்தையின் உயிரைக்காப்பாற்ற வலது கையை அகற்றவேண்டிய சூழல் ஏற்பட்டது. மருந்து கசிவினால் ரத்த ஓட்ட பாதிப்பு ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்படுகிறது” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.