பச்சை பட்டுடுத்தி தங்க குதிரையில் வைகையில் எழுந்தருளிய கள்ளழகர்… தண்ணீரை பீய்ச்சி அடித்து கொண்டாடிய பக்தர்கள்.!!

துரை: கள்ளழகர் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் கோவிந்தா..

கோவிந்தா முழக்கத்துடன் கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். ஆற்றில் இறங்கிய போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து கொண்டாடினர். ஆற்றில் இறங்கும் நிகழ்வில் அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

மதுரை சித்திரைத் திருவிழாவில் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வு இன்று காலை நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து இருந்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் தங்கக் குதிரையில் பச்சைப் பட்டுடுத்தி கள்ளழகர் ஆற்றில் இறங்கினார். அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து கொண்டாடினர். ஆற்றில் இறங்கும் நிகழ்வில் அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

மதுரையில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் நடைபெறும் சித்திரைத் திருவிழா வரலாற்று சிறப்பு மிக்கதாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் மதுரை அருகே இருக்கும் அழகர்கோவிலை ஆகிய இரண்டு கோவில்களையும் இணைத்து இந்த சித்திரைத் திருவிழாவானது கோலாகலமாக நடக்கிறது.

சைவம் மற்றும் வைணவம் ஒருங்கிணைந்த பெரும் விழாவாக இந்த விழா ஆண்டு தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தான் நடப்பு ஆண்டில் சித்திரைத் திருவிழா கடந்த மாதம் 29 ஆம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அழகர்கோவில் சார்பில் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் கடந்த மாதம் 27ஆம் தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு திருவிழா ஆரம்பமானது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் – சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கடந்த 8 ஆம் தேதி நடந்தது. தொடர்ந்து 9 ஆம் தேதி தேரோட்டம் நடந்தது. 10 ஆம் தேதி தீர்த்தவாரியுடன் மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா நிறைவு பெற்றது. நேற்று காலை அழகர் கோவிலில் இருந்து ஊர் நெடுக பக்தர்களை சந்தித்தப்படி மதுரை மாநகருக்குள் வந்தார் அழகர்.

அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் அழகரை அரோகரா கோஷம் முழுங்க, கோவிந்தா கோவிந்தா என்ற பட உற்சாகத்துடன் வரவேற்றனர். அவருக்கு ஆரத்தி எடுத்து வரவேற்றனர். தொடர்ந்து இன்று அதிகாலை 2.30 மணி அளவில் தல்லாகுளம் கருப்பணசாமி கோவிலுக்கு வந்து, தங்கக்குதிரையில் அமர்ந்து ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளினார்.

இதனை தொடர்ந்து இன்று அதிகாலை 3 மணி அளவில் தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றுக்கு புறப்பட்டார். இன்று காலை 5.45 மணி முதல் 6.05 மணிக்குள் தங்கக்குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார். பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று உற்சாகத்துடன் வரவேற்றனர்.

வண்டியூர் வீரராகவப்பெருமாள் முன்கூட்டியே அங்கு வந்திருந்து கள்ளழகரை வரவேற்றார். தொடர்ந்து வைகை ஆற்றில் பக்தர்களுக்கு கள்ளழகர் காட்சி அளித்து வருகிறார்.