வலுவாக இருக்க வேண்டிய இந்தியா கூட்டணி கவலைக்கிடமாக இருக்கிறது – ப.சிதம்பரம்..!

ந்தியா கூட்டணி வலுவாக இருக்க வேண்டும்” என்று நான் ஆசைப்படுகிறேன். ஆனால், துரதிஷ்டவசமாக இந்தியா கூட்டணி கவலைக்கிடமாக உள்ளது என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

சமீபத்தில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட ப. சிதம்பரம், “இந்தியா கூட்டணியின் எதிர்காலம் பிரகாசமானதாக இல்லை” என்றும், “இந்த கூட்டணி இன்னும் உறுதியுடன் இருக்க வேண்டும்” என்பதுதான் தனது விருப்பம் என்றும் கூறினார். ஆனால், “அதன் எதிர்காலம் எனக்கு தெளிவாக தெரியவில்லை” என்றும் தெரிவித்தார்.

“எனது அனுபவத்திலும் வரலாற்று வாசிப்பிலும், பாரதிய ஜனதா கட்சி போன்ற ஒரு சக்திவாய்ந்த அரசியல் அமைப்புக்கு எதிர்க்கட்சிப் பக்கம் பதிலளிக்கக்கூடிய அமைப்பு இல்லாதது கவலைக்கிடமாக உள்ளது” என்றும், “மனித உரிமை ஆணையம் முதல் காவல் நிலையம் வரை எல்லாவற்றையும் ஒரு கட்சி கட்டுப்படுத்த முடிகிறது என்றால், ஜனநாயகம் மிகவும் ஆபத்தான நிலைக்கு தள்ளப்படுகின்றது” என்றும் அவர் கூறினார்.

ஆனால் அதே நேரத்தில், “இந்தியாவில் தேர்தலை யாராலும் முற்றிலும் கட்டுப்படுத்த முடியாது” என்றும் கூறிய ப. சிதம்பரம், “98 சதவீதம் வாக்குகள் பெரும் அளவுக்கு இந்தியாவில் சாத்தியமில்லை” என்றும் தெரிவித்தார்.

2024 பொதுத் தேர்தலுக்கு பாஜகவுக்கு எதிராக, ஜனநாயகம் மீண்டும் திரும்பக்கூடிய அளவில் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.