ஆனைமலை:பொள்ளாச்சி, சேத்து மடை அருகிலுள்ள ஓட்டக்கரடு பகுதியில், கடந்த, 6ம் தேதி விவசாயி ரவிக்குமார் தோட்டத்தில், எட்டு ஆட்டுக்குட்டிகள் மர்மமான முறையில் காயங்களுடன் இறந்து கிடந்தது.இதையடுத்து, அப்பகுதியிலுள்ள விவசாயிகள், ஆடுகளை கொன்றது சிறுத்தை என தகவல் தெரிவித்தனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில், ஆடு, மாடு வளர்க்கும் விவசாயிகள் அச்சமடைந்தனர். ஆடுகளை கொன்ற சிறுத்தையில் பிடிக்க வேண்டுமென, வனத்துறைக்கு கோரிக்கை விடுத்தனர்.வனத்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள விவசாய நிலத்தில், சிறுத்தையின் கால்தடம், மரங்களில் கீறல்களை கண்டனர். இதையடுத்து, சிறுத்தையின் நடமாட்டத்தை கண்டறிய, அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், சிறுத்தை நடமாட்டம் கேமராவில் பதிவாகியுள்து. அங்கு, கூண்டு வைத்து சிறுத்தையை பிடித்து, அடர் வனத்தினுள் விடுவிக்க வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.இதற்காக, நேற்று, வனச்சரக அலுவலர் புகழேந்தி தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதியில், இரண்டு கூண்டுகள் வைத்து, அதில் இறைச்சி துண்டுகள் வைத்துள்ளனர்.சிறுத்தை பிடிபட்டதும், டாப்சிலிப் அடுத்துள்ள வரகளியாறு அடர் வனப்பகுதியில் விடுவிக்க திட்டமிட்டுள்ளனர். சிறுத்தையை பிடிப்பதற்காக, ஓட்டக்கரடு பகுதியில் வனத்துறையினர் தொடர் கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.விவசாயிகள் அச்சப்படாமல், வனத்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
Leave a Reply