சூடு பிடித்தது தேர்தல் களம் .. பரோட்டா சுட்டு வாக்கு சேகரித்த செஞ்சி மஸ்தான்..!

ரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பரோட்டா சுட்டு அமைச்சர் செஞ்சி மஸ்தான் வாக்கு சேகரித்துள்ளார்.

தேர்ந்த பரோட்டா மாஸ்டர் போல் பரோட்டா சுட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தானின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிப்.27ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சி ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அதேபோல் அதிமுக சார்பாக தென்னரசு, தேமுதிக சார்பாக ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா உள்ளிட்டோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. ஒரு பக்கம் அதிமுகவினர் தேர்தல் பணிகளை விரைவுபடுத்தியுள்ள நிலையில், ஒன்னொரு பக்கம் திமுக கூட்டணி வேட்பாளரை வெற்றிபெற வைக்க அமைச்சர்கள் தெருத் தெருவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். திமுக தரப்பில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பணிக்காக 11 அமைச்சர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இதனால் ஈரோடு கிழக்கு தொகுதியில் அமைச்சர்கள் முத்துசாமி, கே.என்.நேரு, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவினரோடு சேர்ந்து காங்கிரஸ் கட்சி தொண்டர்களும் தீவிரமாக வாக்கு சேகரித்து வருகின்றனர். வாக்கு சேகரிக்கும் பணிகள் ஒவ்வொரு தீவிரமாகி வரும் நிலையில், அமைச்சர் செஞ்சி மஸ்தான் மக்களிடையே கவனத்தை ஈர்க்கும் வகையில் புதிய யுக்தியை கையாண்டுள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த அமைச்சர் செஞ்சி மஸ்தான், திடீரென தள்ளுவண்டி ஹோட்டல் அருகே சென்றார். பின்னர் தள்ளுவண்டி கடையில் பரோட்டா போட்டிக் கொண்டிருந்த தொழிலாளியிடம் ஓய்வெடுக்க கூறிய செஞ்சி மஸ்தான், பரோட்டா போடும் பணியை செய்ய தொடங்கினார்.

சப்பாத்தி கட்டையை கையில் எடுத்து பரோட்டாவை தேய்த்து, தேர்ந்த பரோட்டா மாஸ்டர் போல் பரோட்டாவை வீசி, இறுதியாக எண்ணெய் ஊற்றி கல்லில் போட்டு பரோட்டா சுட்டார். இது அப்பகுதி மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதேபோல் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பரோட்டா சுட்ட வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.