பிராமணர் சங்கத்தின் மாநாடு : 7, 8  தேதிகளில் கோவையில் நடக்கிறது

பிராமணர் சங்கத்தின் மாநாடு : 7, 8  தேதிகளில் கோவையில் நடக்கிறது

தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் கோவை மாவட்ட மாநாடு ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது என்று சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.எஸ்.ரமேஷ் தெரிவித்தார்.

இது தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் வசிக்கும் பிராமணர்களை ஒன்றிணைக்கும் வகையில் தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில் மாவட்ட மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 20 ஆண்டுகளுக்கு பின் 7 ஆவது மாநாடு ஜனவரி 7, 8 ஆகிய தேதிகளில் ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெறுகிறது. இரண்டு நாள் நடைபெறும் மாநாட்டில் இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம், அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அரங்குகள் அமைக்கப்படும். பொருளாதாரம், கல்வி, சுய வேலைவாய்ப்பு ஆகியவற்றில் பின்தங்கியவர்களை முன்னேற்றும் வகையில் இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

இதில் தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநில தலைவர் என்.நாராயணன், சங்கரா கண் மருத்துவமனை அறக்கட்டளை நிறுவனர் மருத்துவர் ஆர்.வி.ரமணி, பேச்சாளர் பாரதி பாஸ்கர், இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன் சம்பத், திரைப்பட நடிகர் டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழ்நாடு பிராமணர் சங்க கோவை மாவட்ட பொதுச் செயலாளர் ஜி.கணேசன், பொருளாளர் ஜி.பாலாஜி, மாநாடு ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் ஆகியோர் கலந்துகொண்டனர்.