தைவான் 6 முனைகளை சுற்றி சீன ராணுவம் அதி நவீன ஏவுகணைகள் வீசி போர் பயிற்சி : அமெரிக்கா கடற்படையும் களத்தில் குதிப்பு -உச்சகட்ட போர் பதற்றம்..!

பீஜிங்: தைவானை 6 முனைகளில் சுற்றி வளைத்துள்ள சீன ராணுவம், அதிநவீன ஏவுகணைகளை சரமாரியாக வீசி போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

அமெரிக்கா கடற்படையும் போர் பயிற்சியில் ஈடுபட உள்ளதால் பதற்றம் உச்சமடைந்து உள்ளது. ‘தைவான் தனி சுதந்திர நாடு இல்லை. தங்களுடன் இருந்து பிரிந்து சென்ற நாடுதான். அது எங்களுக்கு சொந்தமானது’ என்று சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதை ஏற்க தைவான் மறுத்து வருகிறது. அதற்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உள்ளன. இதனால், அமெரிக்கா உட்பட தனது எதிரி நாடுகளின் தலைவர்கள் தைவானுக்கு செல்வதற்கு சீனா தடை விதித்துள்ளது.

இதையும் மீறி, கடந்த 3ம் தேதி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு சென்றார். அங்கு, தைவான் அதிபரை சந்தித்து பேசிய பெலோசி, தென் கொரியா புறப்பட்டு சென்றார். தனது எச்சரிக்கையையும் மீறி தைவானுக்கு பெலோசி சென்றதால், சீன கோபத்தின் உச்சியில் இருக்கிறது. அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்காவை மிரட்டியுள்ளது. மேலும், தைவான் மீது பொருளாதார தடைகள் விதித்துள்ளது. அமெரிக்க தூதருக்கு சம்மன் அனுப்பி கண்டித்தது. இதைத் தொடர்ந்து, சீனாவின் முப்படைகளும் தைவானை 6 முனைகளில் சுற்றி வளைத்துள்ளன. அதன் போர் கப்பல்கள், போர் விமானங்கள், ராணுவ டாங்கிகள் போன்றவை கடுமையான போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

மேலும், தைவான் வளைகுடாவில் இருந்து வீசப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளும் தைவானின் வான்வெளியில் பறந்து சென்று கடல் இலக்கை தாக்குகின்றன. இதனால், தைவான் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்த போர் பயிற்சி வரும் 7ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதை போர் பயிற்சி என்று சீனா கூறினாலும், தைவானை தாக்குவதற்கான யுத்தியாகவே உலகளவில் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தைவானின் தென்மேற்கு கடல் பகுதிக்குள் அமெரிக்க போர்க்கப்பல்கள் நுழைந்துள்ளன. அவையும் போர் பயிற்சி செய்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தாலும், சீனாவுக்கு பதிலடி கொடுக்கவே வந்துள்ளதாக கருதப்படுகிறது. இதனால், உச்சக்கட்ட போர் பதற்றம் நிலவுகிறது.