மூன்று நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (31/03/2022) காலை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார்.
அத்துடன், தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமரிடம் வழங்கினார்.
தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீட்டெடுக்க கச்சத்தீவை மீட்க வேண்டும். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு அனுமதி வழங்கக்கூடாது. பாகிஸ்தான் வளைகுடாவில் இந்திய மீனவர்கள் பாதுகாப்புடன் மீன்பிடிப்பதை உறுதிச் செய்ய வேண்டும்.
ரெய்கார்- புகழூர் உயர் மின் அழுத்த மின்தொடரமைப்பினை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த சொத்தாக அறிவியுங்கள். வரும் ஜூன் மாதத்துக்கு பின்பும் ஜிஎஸ்டி இழப்பீட்டை மத்திய அரசு தொடர்ந்து வழங்க வேண்டும். 2022- ல் ஹஜ் புனிதப் பயணத்திற்கான புறப்படும் இடமாக சென்னையை அறிவிக்க வேண்டும்.
இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நிலையின் காரணமாக, அல்லலுறும் இலங்கை தமிழர்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை தமிழக அரசு சார்பில் வழங்குவதற்கு அனுமதிக்க வேண்டும். யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதரகத்தின் வழியாக உதவிகளை வழங்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.
தமிழகத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி- மேம்பாட்டு அமைப்பு ஆய்வுக்கூடம் அமைக்க வேண்டும். சேலம் எஃகு ஆலையின் மிகை நிலத்தை பாதுகாப்பு தொழில் பூங்காவிற்கு வழங்க வேண்டும். நரிக்குறவர்கள்/ குருவிக்காரர்கள் சமூகங்களைப் பட்டியல் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும். தேசிய கல்விக்கொள்கை 2020- ஐ மத்திய அரசுத் திரும்பப் பெற வேண்டும்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம்- 2 திட்டத்தில் 50- 50 பங்கு அடிப்படையில் ஒப்புதல் அளிக்க வேண்டும். மப்பேடுவில் மல்டி மாடல் லாஜிஸ்டிக் பார்க் வரை ரயில் பாதை அமைக்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்சங்கள் கோரிக்கை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்று இரண்டாவது முறையாக மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply