சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக முதல்வர் திகழ்கிறார்-செஞ்சி மஸ்தான் புகழாரம்..!

துரை: சிறுபான்மையின மக்களின் பாதுகாவலராக முதல்வர் ஸ்டாலின் திகழ்வதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசினார்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் சிறுபான்மையினர் உரிமைகள் தினவிழா நடைபெற்றது. அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், பழனிவேல் தியாகராஜன், கீதா ஜீவன், மனோ தங்கராஜ், தமிழ்நாடு சிறுபான்மை நலத் துறை ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் சிறுபான்மை நல ஆணைய உறுப்பினர் செயலர்கள், உறுப்பினர்கள், இஸ்லாமிய, கிறிஸ்துவ அமைப்பினர் கலந்துகொண்டனர்.

விழாவில் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப் பட்டன. விழாவில் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், நாட்டிலேயே தமிழகத்தில்தான் சிறுபான்மை யினர் மரியாதை, மாண்போடு வாழ்கிறார்கள். மத்திய அரசு சிறு பான்மையின மாணவர்களின் கல்வி உதவித் தொகையை நிறுத்தினாலும் கேரளா அறிவித்தது போல, தமிழக அரசும் கல்வி உதவித்தொகையை வழங்க வேண்டும் என்றார்.

அமைச்சர் கீதா ஜீவன் பேசுகை யில், பெரும்பான்மையினர், சிறுபான்மையினருக்கு அரணாக இருக்க வேண்டும் என்றார். நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசும்போது, சிறுபான்மையினர் நலன் காப்பது நமது கடமையாகும். இப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதைப் பெருமையாகக் கருதுகிறேன். என்றார்.

அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசியதாவது: சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை மத்திய அரசு நிறுத்தி உள்ளது. இது தொடர்பாக கடிதம் எழுதி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் அழுத்தம் கொடுத்துள்ளார். பாஜகவினர் திமுக அரசு மீது பொய்களைப் பரப்பி வருகின்றனர். மோடியின் சாதனையை சொல்ல முடியாமல் திமுக அரசை தூற்றுவதை வேலையாக வைத்துள்ளனர். சிறுபான்மையின மக்களின் பாதுகாவலராக முதல்வர் திகழ்கிறார் என்றார்.