நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவு.!!

சென்னை: நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிரான புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 6-ந்தேதி இரவு தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் பறக்கும் படையினரால் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல் மேனேஜர் சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். பிறகு, நயினாருக்கு சொந்தமான ஓட்டல் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.

இதையடுத்து, வருமானவரித்துறையினரும், தாம்பரம் போலீசாரும் இது தொடர்பான விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.. இறுதியில், நயினார் நாகேந்திரன் நேரில் விசாரணைக்கு ஆஜராக தாம்பரம் போலீசார் சம்மனும் அனுப்பியிருக்கிறார்கள்.

வருகிற ஏப்ரல் 22ம் தேதி தாம்பரம் காவல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நயினார் வீட்டில் இல்லாததால் அவருடைய உறவினரிடம் அந்த சம்மன் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக திருநெல்வேலி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடும் ராகவன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அதில், தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பிடிப்பட்டது தொடர்பாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு அமலாக்கத்துறையிடம் மனு அளித்ததாக கூறியுள்ளார். ஆனால், அந்த மனு மீது அமலாக்கத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறியுள்ளார்.

மேலும், வாக்காளர்களுக்கு அளிப்பதற்காக பணம் பதுக்கி வைத்திருந்ததால் நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென தமிழக தேர்தல் ஆணையரிடம் மனு அளித்ததாகவும் அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

எனவே நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை எடுக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட வேண்டுமெனவும், தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் இம்மானுவேல் முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி அமர்வு, இன்றைய தினம் அதாவது ஏப்ரல் 18ம் தேதி விசாரிப்பதாக தெரிவித்தது.

இதனையடுத்து இந்த மனு தொடர்பான விசாரணை, சென்னை ஹைகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருவதாக அறிவிப்பு வெளியானது.. ஏற்கனவே, நயினாருக்கு சம்மன் அனுப்பப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி வரும்நிலையில், இன்றைய தினம் கோர்ட்டில் என்ன உத்தரவு வரப்போகிறதோ என்ற எதிர்பார்ப்பும் எகிறியது..

இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை இன்று மீண்டும் நடைபெற்றது. இருதரப்புவாதங்களை கேட்ட நீதிமன்றம், ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.