காலை உணவு திட்டம் எனக்கு ஒரு மனநிறைவை தருகிறது – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்..!

நாகப்பட்டினம்மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பயின்ற தொடக்கப்பள்ளியில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மாணவர்களுக்கு உணவு பரிமாறி, அவர்களோடு அமர்ந்து உணவு அருந்தினார்.

அப்போது மாணவர்கள் மத்தியில் பேசிய அவர் , தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்று பல திட்டங்களை செய்திருந்தாலும், காலை உணவு திட்டம் எனக்கு ஒரு மனநிறைவை தருகிறது. படிப்புக்காகவும், வேலைக்காகவும் பேருந்தில் செல்லும் சகோதரிகள் கட்டணமில்லாமல் விடியல் பயணத்தை மேற்கொள்ளும் போதும், உயர் கல்வி பெரும் அரசு பள்ளி மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் ஆயிரம் ரூபாய் பெறும் போதும் , அவர்களை விட எனக்கு தான் அதிகமான மகிழ்ச்சி. கல்வி கற்க எதுவும் தடையாக இருக்க கூடாது . காலை உணவு மிக மிக முக்கியம்; காலை உணவு இல்லை என்றால் எப்படி கல்வி கற்க முடியும் . பசியோடு வருபவர்களை பட்டினியாக வைத்து பாடம் சொல்லி கொடுக்ககூடாது என்பதற்காகவே இத்திட்டம் .

நீதிகட்சி ஆட்சியில் மதிய உணவு திட்டம் தொடங்கப்பட்டது; 1971ம் ஆண்டு திமுக ஆட்சியில் ஊட்டச் சத்து வழங்கும் திட்டமாக மாற்றினார் கருணாநிதி . ஒடுக்கப்பட்டோரின் பிள்ளைகள் பள்ளி சென்று கல்வி பெற எதுவும் தடையாக இருக்க கூடாது .அரசுப்பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என்றார்.