ரூ 1,791கோடியில் உருவாகி வரும் அவிநாசி ரோடு மேம்பாலம் விரைவில் திறப்பு.

கோவை மே 3 கோவை மாநகரில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு கோவை அவிநாசி ரோட்டில் உப்பிலிபாளையம் முதல் கோல்டு வின்ஸ் வரை 10.1 கிலோமீட்டர் தூரத்திற்கு ரூ. 1,791 கோடி செலவில் மேம்பாலம் கட்டுமான பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இதற்காக 300 கான்கிரீட் தூண்கள் கட்டப்பட்டு அதன் மீது தளங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த மேம்பாலம் கட்டும் பணி தற்போது 93 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்த மேம்பால பணிகளைசென்னை நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சரவணன் ஆய்வு செய்ய நேற்று கோவை வந்தார்.இவர் கோல்டுவின்ஸ் பகுதியில் உள்ள ஏறு தளம், இறங்கு தளம் விமான நிலையம் அருகே உள்ள ஏறு தளம், இறங்குதளம் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தார். மீதம்உள்ள பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறியதாவது:- கோவை உப்பிலிபாளையத்தில் உள்ள பிரதான ஏறு தளம்மற்றும் கோல்டு வின்ஸ் பகுதியில் பிரதான இறங்கு தளம் ஆகியபணிகள் நிறைவடையும் நிலையில்உள்ளது. இந்த மேம்பாலத்தில் ஜி. கே. என். எம். மருத்துவமனை சிக்னல், பீளமேடு விமான நிலையம் ஆகிய இடங்களில் வாகனங்கள் ஏறி செல்லவும், இறங்கிச் செல்லவும் தளங்கள் அமைக்கும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது .மேலும் பீளமேடு பகுதியில்ரயில்வே கிராசிங் அருகே மேம்பாலத்திற்காக 52 மீட்டர் நீளத்தில் இரும்பு கர்டர்கள் அமைக்க வேண்டியது உள்ளது. இதற்கு ரயில்வே அதிகாரிகள் அனுமதி தர வேண்டும் .இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் ரயில்வே அதிகாரிகள் அனுமதி தருவார்கள் என்று எதிர்பார்க்கிறோம். அனுமதி கிடைத்ததும் இரும்பு கர்டர்கள் பொருத்தப்பட்டு மேம்பாலம் அமைக்கப்படும். இந்த பணிகள் அனைத்தும் முடிந்து இன்னும் ஒரு சில மாதங்களில் வாகன போக்குவரத்திற்கு இந்த மேம்பாலத்தை திறக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.