ஜல்லிக்கட்டு போட்டியை மீட்டெடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி- பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்..!

கோவை: ஜல்லிக்கட்டு உள்ளிட்ட தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளை மீட்டெடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பாஜக மாநில செயற்குழு கூட்டம் கோவை ஈச்சனாரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. மாநில தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். பிரதமர் மோடியின் 9 ஆண்டு கால சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை திறந்து வைத்து பார்வையிட்டார்.

கூட்டத்தில், நரேந்திர மோடி கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்று 9 ஆண்டு காலம் ஆட்சியை நிறைவுசெய்துள்ளார். உலகமே வியந்து போற்றும் வகையில் கடுமையான சவால்களையும் இயற்கையின் இடர்பாடுகளையும், பொருளாதார சரிவுகளையும், உலக போர்ச்சூழலையும் திறமையாக சமாளித்து உலக அரசியல் அரங்கில் பெருமையை நிலைநாட்டி ஜி20 அமைப்பிற்கு தலைமை ஏற்க வைத்துள்ளார். மீண்டும் மோடியை ஆட்சியில் அமர்த்த பாடுபட வேண்டும் என்ற உறுதியை ஏற்போம்.

ஜல்லிக்கட்டு உள்ளிட்ட தமிழர்களின் வீர விளையாட்டுகளுக்கு தடை விதிக்க பீட்டா அமைப்புக்கு மறைமுகமாக திமுக, காங்கிரஸ் கட்சிகள் உதவின. அவற்றை எதிர்த்து ஜல்லிக்கட்டு போட்டியை மீட்டெடுத்த பிரதமர் மோடிக்கு நன்றி.

கனிமவளக் கொள்ளை, மதுபானம், கஞ்சா விற்பனை தட்டுப்பாடின்றி தமிழகத்தில் நடைபெறுகிது. தடையின்றி கிடைக்க வேண்டிய மின்சாரம் ஆளுங்கட்சியின் நிர்வாக திறமை இன்மையால் தடுக்கப்படுகிறது. எனவே தடையற்ற மின்சாரத்தை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய மரணங்கள் அரங்கேறி வருகின்றன. டாஸ்மாக் மதுபான கடைகளை மூடுவோம் என்று சொல்லி மக்களை நம்ப வைத்து ஏமாற்றி கள்ளச்சாராய வியாபாரத்தை கட்டவிழ்த்து விட்டு ஏழை, எளிய உழைக்கும் மக்களின் உயிரோடு விளையாடும் தமிழக அரசுக்கு கடும் கண்டனம் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பாஜக தமிழக பொறுப்பாளர் சிடி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக சட்டப்பேரவை குழு தலைவர் எம்எல்ஏ நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, தேசிய அமைப்பு பொதுச் செயலாளர் சந்தோஷ், விவசாய அணி தலைவர் நாகராஜ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா, மாநில செயற்குழு உறுப்பினர் நடிகை நமிதா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.