திருச்சியில் உறியடித்து பொங்கலை கொண்டாடிய அமைச்சர் ஆட்சியர்…

விவசாய பெருங்குடி மக்களை விவசாயத்தின் உன்னதத்தையும் பறைசாற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது. இதன் வரிசையில் அரசு அலுவலகங்கள், கல்லூரி வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற பல்வேறு நிறுவனங்களில் பொங்கல் பண்டிகைக்கு முன்னதாகவே பொங்கல் விழா கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில் தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு மண்பானையில் சமைத்து கொண்டு இருந்த பொங்கலில் இனிப்பு, நெய்யை சேர்த்து கிண்டினார். பொங்கலோ பொங்கல் என்கிற கிராமிய வார்த்தைகளை கூறி அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளை அமைச்சர் தெரிவித்துக் கொண்டார். இதற்கு அடுத்தபடியாக உறியடிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் பானையில் கட்டி இருந்த பூவை தட்டி விட்டார், அமைச்சருக்கு பின்பாக களத்தில் இறங்கிய திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் ஒரே அடியில் பானையை உடைத்து சுற்றி இருந்தவர்களை உற்சாகப்படுத்தினார் இதில் ஏராளமான அதிகாரிகள் எம்எல்ஏக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.