வன்முறையாளர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் திடீரென வெடித்த பயங்கர வன்முறை: 30 பேர் பலி- 300 பேர் படுகாயம்..!

ன்முறையாளர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் ஏற்பட்ட மோதலில் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஈராக்கில் கடந்த அக்டோபர் மாதம் பொது தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சியா மதத்தலைவர் முக்தாதா அல்-சதார் கட்சி 73 இடங்களில் வெற்றி பெற்றது. இவர் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி இருந்தாலும் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது‌. அதாவது கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைப்பதற்கு அல்சதார் மறுத்துவிட்டார். இதன் காரணமாக அல்சதாருக்கு நெருக்கமான முஸ்தபா இடைக்கால பிரதமராக நியமிக்கப்பட்டார். ஆனால் ஈரான் நாட்டுக்கு நெருக்கமான அல்‌ சூடானியை கூட்டணி கட்சிகள் அதிபர் வேட்பாளர் தேர்தலில் முன்னிறுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அல் சதானியின் ஆதரவாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டக்காரர்கள் 2 முறை நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து சூறையாடினர். இதனால் தொடர்ந்து அரசியலில் பெரும் குழப்பம் நீடித்து வந்ததால் அல்சதார் அரசியலில் இருந்து விலகுவதாக நேற்று முன்தினம் அறிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அல்சதாரின் ஆதரவாளர்கள் பாக்தாத்தில் பெரும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இங்குள்ள அதிபர் மாளிகையை போராட்டக்காரர்கள் சூறையாடியதோடு, பசுமை மண்டலம் பகுதியில் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதனால் பாதுகாப்பு படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டதில் பாதுகாப்பு படையினர் வன்முறையில் ஈடுபட்டவர்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்த பயங்கர துப்பாக்கி சூட்டில் 30 பேர் பலியானதோடு 300-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்துள்ளனர். இந்த வன்முறையால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளதால் இடைக்கால பிரதமர் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளார். இந்நிலையில் வன்முறையை நிறுத்த வேண்டும் என அல் சதார் தன்னுடைய ஆதரவாளர்களிடம் கூறியுள்ளார். மேலும் வன்முறை மற்றும் ஆயுதங்கள் பயன்படுத்துவதை நிறுத்தும் வரை உண்ணாவிரத போராட்டம் இருக்க போவதாகவும் அல்சதார் அறிவித்துள்ளார்.