அரியலூர் மாவட்டத்தில் உள்ள வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்தார்.
மேலும், விடுதியில் தங்கி படித்து வந்த அந்த மாணவி, கடந்த ஜனவரி 9-ஆம் தேதி பூச்சி மருந்தைக் குடித்த நிலையில் 19-ஆம் தேதி உயிரிழந்தார்.
இதனையடுத்து, மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பல சர்ச்சைகள் எழுந்து வந்தது. மாணவியின் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகம் மத மாற்ற செய்ய அழுத்தம் தான் காரணம் என கூறப்படுகிறது. ஆனால், இது வெறும் வதந்தி என்றும், பொய்யான செய்திகள் பரப்பப்படுவதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.
மாணவியின் தந்தை முருகானந்தம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த விவகாரத்தை சிபிஐ விசாரிக்க கடந்த ஜனவரி 31-ம் தேதி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. சிபிஐ-க்கு மாற்றி உயர்நீதிமன்றம் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுக்குத் தடை விதிக்கக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. ஆனால், சிபிஐ விசாரிக்கத் தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனைத்தொடர்ந்து சிபிஐ விசாரணையைத் தொடங்கினர்.
அதன்படி,மாணவி மரணம் தொடர்பான விசாரணை அறிக்கையை தமிழக தலைமை செயலாளர் மற்றும் டிஜிபிக்கு தேசிய குழந்தைகள் நல ஆணையம் அனுப்பியது.அதில், அரியலூர் மாணவி லாவண்யாவின் மரணத்திற்கு மதமாற்றம் காரணம் இல்லை. மாணவியின் பெற்றோர், சகோதரருக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என தேசிய குழந்தைகள் நல ஆணையம் அறிக்கையில் தெரிவித்தது.
இந்நிலையில்,மாணவி தற்கொலை விவகாரத்தில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மாணவியின் தற்கொலை விவகாரத்தின் விசாரணை அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் தாக்கல் செய்ய தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இவ்விவகாரத்தில் தங்களையும் ஒரு மனுதாரராக இணைத்துக் கொள்ள ஆணையம் சார்பாக உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply